சங்கீதம் 6 : 1-4 16 ஜூலை, 2018 திங்கள்
“நானே அவர்களை குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” – ஏசாயா 57 : 19
இன்று நோய்கள் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்டது. சுத்தமற்ற காற்று, தண்ணீர், உணவு ஆகியவை நமக்கு நோய்களை வருவிக்கின்றன. கடவுள் நமக்கு தந்திருக்கிற உடலை ஆரோக்கியமாக வைக்கத் தவறி விடுகிறோம்.
நோய்கள் நீண்ட காலமாக நம்மை வருத்தும்போது நாம் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு நம்பிக்கையை இழந்து விடுகிறோம். நம்பிக்கையை இழந்து போகக் கூடாதென்று கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தம் அளித்திருந்தார். உன்னை குணமாக்குகிறவர் நானே என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தார். நாற்பது வருட பாதயாத்திரையில் காடுகள், வனாந்தரங்கள், கடற்கரைகள், பனி, மழை, காற்று என கடந்து வருகையில் பல நோய்கள் பாதிக்கக்கூடும் என்பதை கடவுள் அறிவார். இதனால் `குணம்’ கடவுளால் வரும் என விசுவாசித்து, பல நோய்களிடமிருந்தும் பாம்புக்கடிகளிடமிருந்தும் விடுதலைபெற்று வந்தார்கள்.
இயேசு கிறிஸ்து தமது வல்லமையினால் பல நோய்களை குணமாக்கி மக்கள் சுகம்பெற உதவினார். தானே பரம வைத்தியர் என்பதை மக்கள் அறியும் படிச்செய்து கடவுளை மகிமைப்படுத்தினார். இயேசுவின் மனதுருக்கமே மக்கள் சுகம் பெறக் காரணமாயிற்று. இதை அறிந்து கொள்ளவேண்டும். சுகம் பெற நமது விசுவாசமும் தேவையாய் இருக்கிறது. அதனால் தான் இயேசு கிறிஸ்து அற்புதங்களை நடப்பித்தவர்களிடம் `உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கினது’ என்று கூறினார். மருத்துவ சேவைகள் தோல்வி அடையலாம். ஆனால் கடவுளின் சித்தமும் இரக்கமும் ஒருபோதும் தோல்வி அடையாது. நமது விசுவாசம் பெருகட்டும். கடவுளின் கிருபை இறங்கி வரட்டும். இன்று நீங்கள் சுகம் பெற்றுள்ளீர்கள். கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
குணமாக்கும் கடவுளே! நோய்களின் நோவுகளிலிருந்து விடுதலை தாரும். வியாதிகளின் துயரங்களில் இருந்து விடுவியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
