யோவான் 3 : 12-15 4 ஜூலை, 2018 புதன்
“மனுஷகுமாரனும், விசுவாசமாயிருக்கிறவன் எவனும் அவருக்குள் நித்திய ஜீவனைப் பெறும்படி உயர்த்தப்படவேண்டும்.” – யோவான் 3 : 15
ஆதாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான். பாவத்தில் விழுந்ததால் கடவுளின் சாயலை இழந்தான். எனினும் கடவுள் தனது சாயல் முழுவதையும் இயேசு கிறிஸ்துவில் வைத்து அவரை தேவகுமாரனாகவும் மனித குமாரனாகவும் நமக்குத் தந்தார். இயேசு கிறிஸ்துவும் அநேக தருணங்களில் தன்னை மனித குமாரன் என்று வெளிப்படுத்தவே விரும்பினார் என்பதைத் திருமறை விளக்குகிறது. மனித குமாரன் சிலுவையில் உயர்த்தப்படவேண்டும் (யோவான் 3:14) என்றும் பரலோகம் சென்ற மனித குமாரன் மறுபடி வருவார் என்றும் (மாற்கு 13:26) தன்னைப்பற்றி கூறினார்.
பொதுவாக இயேசுகிறிஸ்து மனித குமாரன் என்று பெயர் பெற்றிருந்தாலும் மனித குமாரனின் ஆளுகையே நமக்கு ஆசீர்வாதமாகும். மனித குமாரனின் நித்யகால ஆளுகையை கடவுள் அவரிடத்தில் கொடுத்திருக்கிறார். அவரது ராஜரீக ஆளுகையில் தான் நாம் நீதியையும் சமாதானத்தையும் பெற்று வாழ்கிறோம். அவர் மனித குமாரனாக இருக்கிறபடியால் நமக்கு ஊழியம் செய்கிறவராகவும் இருக்கிறார்.
இயேசுவில் கடவுள் நமது தேவைகளைச் சந்திக்கிறார். நமக்குத் துணை நிற்கிறார். நம்மைப் பராமரித்துக் கொள்கிறார். இதன்மூலம் மனிதகுமாரன் ஊழியம் செய்கிறவராக வந்தாரே தவிர ஊழியம் கொள்ளுகிறவராக வரவில்லை என்ற உண்மையை அறிந்து கொள்ளலாம். உலகோரை மீட்கும் பொருட்டு வந்த இந்த மனித குமாரனாலே இயேசுகிறிஸ்து நம்மை மீட்க ஆளுகை செய்திட நம்மை அவர் கரங்களில் ஒப்புவிப்போம்.
நித்திய கடவுளே! நீர் மனித குமாரனாக கிறிஸ்து இயேசுவை தந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். அவரில் எங்களுக்கு இன்றும் என்றும் உதவிகள் தந்து வழி நடத்தும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! ஆமேன்.
