எபிரேயர் 12 : 1-6 4                                            ஏப்ரல், 2018 புதன்

“இயேசுகிறிஸ்து ஆண்டவரென்று நாவுகள் யாவும்… அறிக்கை பண்ணும்படிக்கும் கடவுள் அவரை உயர்த்தி…” – பிலிப்பியர் 2 : 11

தியானப்பகுதி, ஆரம்பகாலத் திருச்சபையின் விசுவாச அறிக்கையின் ஒரு பகுதி போல் தெரிகிறது. இயேசுவின் வீழ்ச்சி உலக மக்களின் எழுச்சிக்குக் காரணம். தாழ்மையால், மரணத்தால் இயேசு மீட்பை நிறைவேற்றுவதால் உயர்த்தப்படுகிறார். இயேசுவின் பாடு, மரணம், அடக்கம் யாவற்றோடும் இயேசுவின் உயிர்ப்பையும் சேர்த்தே நாம் தியானிப்பது அவசியமாகிவிடுகின்றது. எருசலேமுக்குள் இயேசு நுழைந்த பொழுது குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு மக்கள் இயேசுவை வாழ்த்தினார்கள் என நாம் அறிவோம். இன்றைய தியானமும் இயேசுவை வாழ்த்த – அறிக்கையிட நம்மை அழைக்கிறது.

வாழ்த்து வாயிலிருந்து மட்டும் வரலாம். அறிக்கை மனப்பூர்வமான உணர்ச்சியின் வெளிப்பாடு.
`நாவுகள் யாவும் அறிக்கையிட! நாவுகள் யாவும் என்றால் உலகில் பிறந்த எவரும் அறிக்கையிடத்தக்க பெயர் இயேசுகிறிஸ்து. இயேசு உயர்த்தப்பட்டார், சகல முழங்கால்களும் முடங்கும்படி உயர்த்தப்பட்டார். முடங்காத முறட்டுக்கால்களுக்கும் இயேசுதான் ஆண்டவர். வானத்திலும் பூமியிலும் எனக்குறிப்பிடுகிறது வசனம், அதாவது வாழ்ந்தவர்கள், வாழுகின்றவர்கள், இனி வாழப் போகிறவர்கள் யாவருக்கும் இரட்சிப்பின் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவே. இதை யாரும் மறுக்க முடியாது. இது கடவுள் எடுத்த முடிவு. `பத்தோட பதினொண்ணு… அத்தோட இது ஒண்ணு’ என்று ஏனோ தானோ என இயேசு கிறிஸ்துவை நினைக்கவேண்டாம். பெயரளவில், பாரம்பரியமாக கிறிஸ்தவர் ஆக இருப்பதில் பயனில்லை. மனப்பூர்வமாக இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என நம்பி ஏற்கின்றீர்களா? உங்கள் அறிக்கை நாவிலிருந்து வராமல், நெஞ்சிலிருந்து புறப்பட கடவுளின் ஆவியானவர் துணை செய்யட்டும்.

கர்த்தாவே, எருசலேம் நகரில் நுழைந்த இயேசு என் மனதிலும் நுழைந்து, மனப்பூர்வமாக நான் அவரை அறிக்கையிட என்னை ஆட்கொள்ளும். இயேசுவின் வழியே ஆமேன்.