2 கொரிந்தியர் 5 : 16-18 7 ஆகஸ்ட், 2017 திங்கள்
“கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்… புதிதாயின.” – 2 கொரிந்தியர் 5 : 17
பழையன கழிதலும் புதியன புகுதலும் மனிதர்களால் மிகவும் விரும்பப்படுகிற ஒன்று. புதிய உணவு, புதிய உடை, புதிய உறவு இப்படி பல புதியன வாழ்வில் அடிக்கடி நம்மைச் சந்திக்கின்றன. நம்மை ஆனந்தப் படுத்துகின்றன. புலர் காலைப் பொழுதும் ஒரு புதிய நாளின் பிறப்புதானே. புதியன விரும்பாதார் எவர்? கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், பிறந்த நாள் எதுவாயிருந்தாலும் புதியன தரித்தல் தான் மவுசு என்று நினைக்கிறோம். புத்தாடை, புதுமனம், புதியபொருட்களின் வாசனை, புதிய மழைத்துளிகள் பிறப்பிக்கின்ற மண் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். புதிய ருபாய் தாள்களை சிலர் பயன்படுத்த மனசின்றி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் இது போன்ற சில ‘புதியவை’களைப் பிடித்திருக்கலாம். தமிழர் திருநாளான பொங்கல் என்றவுடனே போகியும் நினைவுக்கு வரும். பழையன கழிதல் முதலில். பின்பு தான் புதியன போற்றப்படும்.
இந்தப் புதிய விஷயங்களில் ஒன்று தான் நாமும். வியப்பாக இருக்கிறதா? ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்ந்தால் அவர் தினமும் புதியதாகப் படைக்கப்படுகிறார் என்கிறது திருவசனம். பழையவை கழிந்தன. புதியன பிறந்தன, புகுந்தன. புதியன புகுதல் மட்டுமல்ல பழையன கழிதலும் இறையவரின் இன்ப ஆசிதான். தினம் தினம் புதுப்பிக்கப்படும் பாக்கியம் பெற்றவர்கள் நாம்.
என் தந்தை ஒரு துப்பாக்கி வைத்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதை சுத்தம் செய்வார். நீண்ட குழலை கரிமருந்து வாடை இல்லாமல் ஈரத்துணி நுழைத்து பலமுறை துடைப்பார். காய வைப்பார். முகர்ந்து பார்ப்பார். தேவையானால், திரும்பவும் கழுவுவார். துப்பாக்கி எப்பொழுதும் புதிது போல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குறி இலக்கு தப்பாது என்பர்.
இரட்சிப்பு, மீட்பு, பாவமன்னிப்பு என்பவை இறையவரின் புத்தாக்கப் பணியின் பலன்கள். இவை அனைத்தும் பாவிகளான நமக்காக கர்த்தர் தமது அளவற்ற அன்பின் அடையாளமாக உருவாக்கப்பட்டவை. இயேசுகிறிஸ்து சிலுவையில் துவங்கி வைத்த இப்பணி தினந்தோறும் வேதவசனங்களின் வழியே நம்மில் நடைபெறக் காத்திருக்கிறது. பழையன கழிய, புதுப்பிக்கப்பட ஆயத்தப்படுவீர். தினந்தோறும் வேதம் வாசிப்பீர், புதுப்பிக்கப்படுவீர்.
சம்பூரணரே, எமது பாவ அழுக்கை மாற்றி, தினந்தோறும் உம்மால் புதுப்பிக்கப்பட எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
