2 இராஜாக்கள் 17 : 38-41 28 ஜூலை, 2017 வெள்ளி
“அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைப் பற்றிக்கொண்டிருந்து…” – 2 இராஜாக்கள் 18 : 6
வாசிப்புப் பகுதியை வாசித்துப் பாருங்கள். வேறு தேவர்களுக்கு அஞ்சாதீர். தேவ உடன்படிக்கையை மறவாதீர் என்று இஸ்ரவேலருக்கு கர்த்தர் சொல்லியிருந்தார். ஆனால் யூத மக்கள் கர்த்தர் சொல்லைக் கேட்டு நடக்கவில்லை. ஒரு பக்கம் கர்த்தருக்குப் பயந்தனர். இன்னொரு பக்கம் விக்கிரகங்களையும் சேவித்தனர். பூரண நம்பிக்கையின்மை. தள்ளாடும் விசுவாசம். இதே நிலை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வரை அதாவது பல தலைமுறைகளையும் பாதித்தது.
தியானப் பகுதியில், எசேக்கியா என்ற அரசன் பற்றி எழுதப்பட்டுள்ளது. இவர் ஆண்டவரிடம் பற்று கொண்டிருந்தார். கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார். ஆண்டவரும் அவரோடிருந்தார். அவர் காலத்தில் மக்கள் செழித்திருந்தனர். அரசரும் எல்லாவற்றிலும் சித்தி பெற்றார். எந்த நிலையிலும் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிருத்தல் நமது வாழ்வைப் பாதுகாக்கும்.
ஒரு ஊரில் ஒரு நல்ல செல்வந்தர் இருந்தார். அவர் ஏழைகளுக்குத் தான தருமம் செய்தார். ஒருநாள் இரவில் ஒரு கனவு கண்டார். கனவில் ஒரு தேவதை ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதுகிறீர்கள் என்று இவர் தேவதையைக் கேட்டார். இறையவரை நேசிக்கிறவர்கள் பெயர் பட்டியலை எழுதுகிறேன் என்றார் தேவதை. அந்தப் பட்டியலில் என் பெயர் இருக்கிறதா என்று செல்வந்தர் கேட்டார். உன் பெயர் இங்கே இல்லை என்றார் தேவதை. அடுத்த இரவு வெகு நேரம் செல்வந்தர் விழித்திருந்தார். இறைவனை நேசிக்கிறவர் பட்டியலில் தன் பெயர் இல்லையே என்று வருந்தினார். எப்படியோ தூங்கிவிட்டார். அன்றைக்கும் அதே கனவு. தேவதை எழுதியதைப் பார்த்தார். எதுவுமே கேட்க விரும்பவில்லை. ஆனால் தேவதை அவரிடம் இறையவரை நேசிக்கிறவர்கள் பட்டியலில் இன்றைக்கு உன் பெயர் இருக்கிறது என்றார்.
இறையவரை நேசிக்கிறதை மெய்ப்பிக்க நற்செயல் செய்து பயனில்லை. இறையவர் அருள் தருகிறார்! வளம் தருகிறார்! ஆவியரின் துணை இருக்கிறது! ஆகவே நல்லவை நாடு! நன்மை செய்! இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் பெற்ற மீட்பிற்குக் காரணமான அளவற்ற அன்பு நமது செயல்களில் வெளிப்படட்டும். இறையவர் உன்னை நேசிக்கிறார். இறையவரால் நேசிக்கப்படுவதே பெரிய பேறு. தெய்வீகப் பேறுபெற்று வாழ்வீர்.
அளவற்ற அன்புகொண்டவரே, நாங்களும் உம்மில் நிலைத்திருந்து, உமது நேசத்தை அனுபவித்து, பிறருடனும் பகிர்ந்து கொள்ள எமக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
