1 பேதுரு 3 : 5-7 27 ஜுன், 2017 செவ்வாய்
“நோவாவின் நாட்கள் எப்படியோ அப்படியே மனுஷகுமாரன் வருகையும் இருக்கும்.” – மத்தேயு 24 : 37
சில வருடங்களுக்கு முன்பு நகர் முழுவதும் ஒரு நாளைக் குறித்து அந்த நாளில் இயேசு வரப்போகிறார் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பள்ளிக்குச் சென்ற மாணவன் இதைப் பார்த்தான் படித்தான். இரவில் சாப்பிட அமர்ந்து குடும்ப ஜெபம் முடிந்தது. தன் தகப்பனாரிடம் அப்பா நாளை அம்மாவின் பிறந்தநாள். நாம் கொண்டாட முடியாது என்றான். தாயார் ஏன் என்று கேட்டார். பையன் அமைதியாக நாளை இயேசு உலகை நியாயந் தீர்க்க வரப் போகிறார். ஊர் முழுவதும் சுவரொட்டிகளைப் பார்த்தேன் என்றான்.
இத்தகைய நிகழ்வுகள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. உலகம் எப்போது முடியும்? இயேசுவின் வருகை எப்போது இருக்கும் என்ற ஆய்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தங்களை பரிசுத்தவான்கள் என்றும், தங்களோடு கடவுள் வந்து பேசினார் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய பொய் பிரச்சாரங்களை நம்பாமல் ஆராய்ச்சியில் இறங்கிப் பயப்படாமல், உலகில் சந்திக்கும் சோதனைகள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள், வான்வெளியின் அறிகுறிகளைக் காணும் போது விசுவாசத்தில் இணைந்திருந்து கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்ந்தால் நாம் வாழ்வடைவோம். கிறிஸ்து எப்பொழுது வந்தாலும் அனுதின ஆயத்தமும் அவர்மேல் வைக்கிற விசுவாசமுமே நம்மை இறையரசில், விண்ணக வாழ்வில் சேர்க்கும் என்பதை நினைவிற் கொள்ளுவோம்.
இயேசு உலகை நியாயந்தீர்க்க மறுபடியும் வருவார் என்பதே திருமறை கூறும் உண்மை. இதில் சந்தேகமில்லை. இதற்காக பயப்படாமல் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் அவர் கற்பித்தபடி பிதாவின் சித்தத்தைச் செய்து நித்திய வாழ்வில் பிரவேசிப்போம். நமது தியானப் பகுதியில் தெளிவாக மனுஷகுமாரனின் வருகை மக்கள் வயலில் இருக்கும் போதும், எந்திரம் அரைத்துக் கொண்டிருக்கும் போதும் நடைபெறும் என்று கூறுகிறது. அதாவது மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போது அது நடைபெறும். தனியே காத்திருப்புக் கூட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது ஆண்டவர் வந்து தம்முடையவர்களைச் சேர்த்துக் கொள்வார்; அவருடைய வருகையைக் குறித்து அக்கறை அற்றவர்கள் கைவிடப்படுவார்கள் என்று சொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
இயேசுவின் வருகையை எப்படிப் புரிந்து கொள்வது? நோவா பேழையைக் கட்டி முடிக்க நாள் ஆனது. அதைக் கண்டும் மக்கள் சிந்திக்கவில்லை. இன்றும் கடவுள் இயற்கை நிகழ்வுகள் வழியாகப் பேசுகிறார். வசனத்தின் வழியே பேசுகிறார். இவற்றை நாம் கருத்தில் கொள்ளாமல் கவலையற்று வாழ்கிறோம். மழை பொழிந்தது, மக்கள் அழிந்தார்கள். கடவுள் எல்லாரையும் எச்சரிக்கிறார். கேட்கத் தவறிப் போனால் அழிவு ஏற்படும். திடீரென்று இயேசு வருவார். தப்பவே முடியாது. இயேசுவாகிய பேழையில் அடைக்கலம் புகுவோம். பேராபத்திலிருந்து காப்பாற்றுவார். நித்திய வாழ்வில் சேர்ப்பார்.
எங்களோடு பல வழிகளில் பேசுகிற கடவுளே, எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து, உமது சித்தப்படி வாழ்ந்து, விசுவாசத்தில் நிலைத்திருந்து நித்திய வாழ்வைப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
