ஏசாயா 55 : 1-3 12 ஜுன், 2017 திங்கள்
“கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.” – ஆமோஸ் 5 : 6
இரண்டாம் யெரோபெயாம் அரசாண்ட காலத்தில் மக்கள் சமாதானத்தையும் செழுமையையும் அடைந்தார்கள். வணிகம் பெருகியது, செல்வம் தழைக்கலாயிற்று, செல்வந்தர் எண்ணிக்கை பெருகிற்று. ஆனால் யுத்த காலத்தில் வறியவர்களாக்கப்பட்ட மக்கள் செல்வந்தர்களின் அநீதியினால் இன்னும் வறுமைக்குள்ளானார்கள். வறியவர்கள் ஒடுக்கப்பட்டு இக்கட்டான நிலையில் இருந்தார்கள். செல்வந்தர்களோ வேனிற்காலத்திற்கும், மாரிக்காலத்திற்கும் தனித்தனியே மாளிகைகளைக் கட்டி, குடித்து, வெறித்து வாழ்ந்தார்கள். நீதியும் நியாயமும் புரட்டப்பட்டன. செல்வந்தர்கள் அதிக இலாபம் நாடி ஏழைகளை ஒடுக்கினார்கள். கையூட்டு கொடுத்து நீதியைப் புரட்டினார்கள். ஆமோஸ் தீர்க்கருக்கு இவை தாங்கமுடியாத தீங்குகளாகக் காணப்பட்டன.
மேற்கூறிய சமூகக் கேடுகள் இஸ்ரவேலரின் சமய வாழ்க்கையின் கேட்டினால் ஏற்பட்டது என்கிறார் தீர்க்கர். மக்கள் யெகோவாவை பாகாலைப் போல தொழலாயினர். தங்கள் தீய வாழ்விற்குத் நியாயம் கற்பிக்கும் வண்ணம் தங்கள் சமய வாழ்வினையையும் அமைத்துக் கொண்டனர். மக்களின் சமய, சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீதியுள்ள கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் மக்களைச் சந்திக்கப் போகிறார், அநீதியை அழிப்பார் என்கிறார் தீர்க்கர். கடவுள் இஸ்ரவேலரைப் பற்றி அக்கரையுள்ளவர். காரணம் பூமியிலுள்ள சலக வம்சங்களிலும் இவர்களையே தமக்குச் சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தார். ஆனாலும் அவர்களின் அக்கிரமங்களினிமித்தம் அவர்களைத் தண்டிப்பார் என்கிறார். கடவுள் இஸ்ரவேலரைத் தண்டிப்பது அவர்கள் மீது அவருக்குள்ள சிறப்பான அக்கறையேயன்றி வேறு ஒன்றுமில்லை. தண்டனையின் வழியாக இஸ்ரவேலர் மடிந்து போவதையல்ல, மனந்திரும்பிப் பிழைப்பதையே கடவுள் விரும்புகிறார். அதனால் தான் கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் என்கிறார்.
தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். சேனைகளின் கடவுளாகிய கர்த்தர் உங்களுக்கு இரங்குவார். கடவுளின் வல்லமை வானம், பூமி, பாதாளம் ஆகியவற்றின் மேல் உள்ளது. பாவி யாராயிருந்தாலும், எங்கிருந்தாலும் அவனைத் தண்டியாமல் விடார். ஒருவன் கடவுளை மறந்து போகும் போது அவர் சமூகத்தில் நீதி நேர்மையற்று, சமய வாழ்வில் தூய்மையற்றுப் போகிறான். கடவுளின் நீதி பரிசுத்தம், தூய்மை ஆகிய பண்புகள். மனிதனின் வாழ்க்கையில் கடவுளை மறப்பது நீதி பரிசுத்தம் தூய்மை ஆகிய பண்புகள் புரளக் காரணமாகின்றன. நம்மையும் கடவுள் தெரிந்தெடுத்திருக்கிறார். எல்லா நிலையிலும் துறையிலும் வாழ்விக்கிறார். மனிதநேயத்தோடு வாழுவோம். கர்த்தரையே தேடுவோம்.
நீதி நேர்மையுள்ள கடவுளே, உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மில் நிலைத்திருந்து உம்மையே தேடி வாழ்வு பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
