1 கொரிந்தியர் 4 : 1-4 5 ஜுன், 2017 திங்கள்
“நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது லாபத்தைத் தேடியடைந்ததுண்டா?” – 2 கொரிந்தியர் 12 : 17
ஆதாயம் இல்லாமல் யாராவது ஆற்றோடு போவார்களா? என்பது பழமொழி. நாம் எதைச் செய்தாலும் ஓர் எதிர்பார்ப்போடு செய்கிறோம். ஆனால் பலர் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் காரியங்களைச் செய்கிறார்கள். நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி நம் நாட்டு விடுதலைக்காக போராடி வெற்றி பெற்றது எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்துச் செய்ததல்ல.
பவுலடிகளார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ரோமக் குடியுரிமையுள்ளவர். சிறந்த கல்விமான், நியாயப்பிரமாண முறையின்படி வாழ்ந்தவர். இவரை இயேசு ஆட்கொண்டபோது, இயேசுவில் பெற்ற பாவமன்னிப்பின் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடு இணை இல்லை என்று அறிந்தார். தான் கண்டுக் கொண்ட மேசியா இயேசுவே என்பதை தீவிரமாக மக்களுக்குக் கூறி அறிவித்தார். திருச்சபைகள் உருவாயின. இந்தத் திருச்சபைகளோடு தொடர்பு வைத்துக்கொள்ள நேரில் சென்று பார்த்தார். கடிதங்கள் எழுதினார். சில சமயங்களில் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களை அனுப்பிப் பார்த்து விசாரித்து வரச் சொன்னார். தன்னைக் கடவுளின் உக்கிராணக்காரன் என்று அழைத்தார். உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனாக காணப்படவேண்டும் என்று விரும்பினார். தன்னை அழைத்த கடவுளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்தில் வாழ்ந்தார்.
கடவுளின் திருப்பணியைச் செய்வோரிடத்தில் அதிக உண்மை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பவுலடிகளார் கொரிந்தியரிடம் நான் உங்களிடம் அனுப்பியவர்கள் வழியாக நான் ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்தேனா? என்கிறார். இக்கேள்வி தன் மனச்சாட்சி சுத்தமாக இருப்பதை காட்டுகிறது. யாரும் தன் ஊழியத்தை குறைகூறக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்.
எவரும் உங்களை ஏமாற்றிச் சம்பாதிக்கவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும், உங்கள் பணமல்ல என்கிறார். உங்களுடையவை களையல்ல, உங்களையே ஆசிக்கிறேன் என்கிறார். பெற்றோருக்கு பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோரே செல்வத்தைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆதலால் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காக மிகவும் சந்தோஷமாய் செலவு பண்ணவும், முழுவதும் செலவு பண்ணவும் விரும்புகிறேன் என்கிறார். கடவுள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மைத் தம் மக்களாக அழைத்திருக்கிறார். நம் அழைப்பை உணர்ந்து எதையும் நாடித் தேடாமல் குறுக்கு வழியில் சம்பாதிக்காதபடி நிறைவோடு வாழுவோம்.
எங்கள் தந்தையே! இயேசுவில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் எங்களை அழைத்திருக்கிறீர் நன்றி. நாங்களும் உண்மையுள்ள உக்கிராணக்காரராக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
