1 சாமுவேல் 8 : 7-9                                             29 மே, 2017 திங்கள்

“அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைச் சேவித்து வந்தார்கள்.” – 1 சாமுவேல் 8 : 8

கிரியை இல்லாத விசுவாசம் மட்டுமல்ல, வேரில்லாத விசுவாசமும் செத்ததுதான். தியான வசனத்தை உள்ளடக்கிய வாசிப்புப் பகுதி, நாம் அறிந்த ஒன்று. தங்களை எகிப்திலிருந்து விடுவித்து வனாந்தரப் பயணத்தில் பாதுகாத்து வழி நடத்தின கடவுளை மறந்து, ஒரு புதிய அரசரை இஸ்ரவேலர் விரும்பியதை வாசிப்புப் பகுதி விவரிக்கிறது. சீனாய் மலையடியில் பொற் கன்றுக்குட்டியை இஸ்ரவேலர் வணங்கிய நிகழ்வினை நாம் அறிவோம். இரண்டு நிகழ்வுகளும் இஸ்ரவேலரின் நன்றியில்லாமையையும், மேலோட்டமான விசுவாசத்தையும் காண்பிக்கின்றன.

வாரம் தவறாமல் ஒரு முதியவர் பிச்சைகேட்டு எங்கள் வீட்டுக்கு வருவார். ஒருமுறை, `சில்லறை இல்லை, அடுத்தவாரம் பார்ப்போம்’, என்று சொன்னேன். கடந்த பல மாதங்களாக அவருக்கு உதவி செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், தூஷண வார்த்தைகள் சொல்லி திட்டிக் கொண்டே போனார். அதன் பிறகு அவருக்கு நான் பிச்சையிடுவதில்லை.  நன்றி மறப்பதிலும், தேவைக்காக மட்டும் கடவுளைத் தேடுவதிலும் இஸ்ரவேலர் இந்தப் பிச்சைக்காரரை விடக் குறைந்தவர்களில்லை.
எகிப்திலிருந்து நானூறு வருட அடிமை வாழ்வினின்று விடுதலை, செங்கடலைப் பிரித்து கடவுள் உருவாக்கிய பாதை, பகலிலும் இரவிலும் மேகம் – அக்கினி ஸ்தம்பப் பாதுகாப்பு, தண்ணீர், காடை, மன்னா போன்ற உணவுகள் யாவையும் கொடுத்தவர் கடவுள் என்பதை இஸ்ரவேலர் அறிவார்கள். ஆனால் மலைமேலேறிச் சென்ற மோசே வரவில்லையென்ற ஒரே காரணத்துக்காக பொற்கன்றுக்குட்டியை தெய்வமாக வணங்கினர். கானான் தேசத்தில் இராஜாக்களையெல்லாம் மேற்கொண்டு, நியாயாதிபதிகள் வழியாக இஸ்ரவேலரை ஆண்டு வந்தவர் கடவுள் என்பது தெரிந்தும், வேறொரு ராஜா வேண்டுமென்று இஸ்ரவேலர் கேட்டார்கள்.

நாம் எப்படி? கடவுளின் கிருபையினால், இயேசு கிறிஸ்துவின் பாடு – மரணம் – உயிர்ப்பு இவற்றில் வைக்கும் விசுவாசமே நம்மை இரட்சிக்கும் என்று உணர்ந்திருக்கிறோம்; ஆனால் அந்த விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறோமா? நல்ல நேரம் பார்ப்பது, ஜோசியம் கேட்பது, வாஸ்து பார்ப்பது, குறிப்பிட்ட சில ஊழியர்கள் சொன்னால் நடக்கும் என்று நம்புவது போன்ற அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிறோமா? வேண்டாம். கர்த்தரையே முழுமையாக நம்புவோம்.

மெய்க் கடவுளாகிய ஆண்டவரே, எல்லாவற்றையும் பார்க்கிலும் உம்மிடம் அன்பு கூர்ந்து, உமக்குப் பயந்து, உம்மிடத்தில் நம்பிக்கையாயிருக்கும்படி எங்களைப் பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.