1 தெசலோனிக்கேயர் 5 : 1-6 24 மே, 2017 புதன்
“ அப்படியே நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷ குமாரன் வருவார்.” – மத்தேயு 24 : 44
விடிகிற வேளையை நாம் அறிவோம்; திருடன் வருகிற வேளையை அறிவோமா? மின்னல், ஒளியைக் காணும்போது `இடி இடிக்கப் போகிறது’ என்று உணருகிறோம்; மின்னல் எப்பொழுது மின்னும் என்பதை அறிய முடியுமா? இப்படியே உலகினை நியாயந்தீர்க்க வரப்போகும் மனுஷகுமாரன் வரும் நாளையோ நேரத்தையோ எவரும் அறிய முடியாது என்பது சத்திய வேதம் கூறும் உண்மை.
ஏற்கனவே மரியாளின் மகனாக மனுஷகுமாரன் மனுக்குலத்தை மீட்க வந்தார்; இனி வரப்போகிற மனுஷகுமாரன் உலகினை நியாயந்தீர்க்க வருவார். முதல் வருகை கடவுளின் கருணையையும், மன்னிப்பையும் உலகோர் உணர்ந்துகொள்ளக் காலங்களை நீட்டித்துக்கொடுத்தது. இரண்டாம் வருகையோ ஆயத்தமாயிருப்பவர்களுக்கு ஆனந்த வாழ்வையும், ஆயத்தமில்லாதவர்களுக்கு எரியும் நரகத்தையும் முடிவு செய்யும் இறுதி நேரத்தைக் கொண்டு வருகிறது. எனவே `ஆயத்தமாயிருங்கள்’ என்கிற எச்சரிக்கை, கடவுளின் வாயிலிருந்து வரும் `கிருபையின் கடைசிக் குரல்’ என்பதில் ஐயமில்லை.
எப்பொழுது வருவார் என்பதை நாம் அறியாதபடியால், எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையும் இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது. எப்படிப்பட்ட ஆயத்தம் என்பதை வாசிப்புப் பகுதி தெளிவாகக் கூறுகிறது. இருளின் செயல்களை (சாத்தானின் கிரியைகளை) ஒழித்துவிட்டு, ஒளியின் கிரியைகளை (ஒளியாகிய கிறிஸ்து இயேசுவை) அணிந்து கொள்ளுவதே ஆயத்தமாயிருப்பதின் அடையாளங்களாகும். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுவதெப்படி? புத்தாடை அணியுமுன் அழுக்காடைகளைக் களைவது போல, பாவச் செயல்களை விட்டு விலகுவது ஆயத்தத்தின் முதல்படி. `இயேசுவே என் இரட்சகர்’ என்ற விசுவாசம். இந்த விசுவாசத்தினால் நான் மீட்கப்பட்டிருக்கிறேன் என்ற நம்பிக்கை, இந்த நம்பிக்கையோடு வாழும் அன்பின் வாழ்வு இவைகளே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆயத்தங்கள். விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்னும் ஆயத்தங்களோடு இருப்பவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குப் பயப்பட வேண்டியதில்லை.
அருள் நிறைந்த கர்த்தாவே, இருளின் தீய வழிகளை விட்டு விலகி, ஒளியின் பிள்ளைகளாக எங்களை ஆயத்தப்படுத்திக் காத்துக் கொள்ளும். இயேசுவின் வழியே ஆமேன்.
