1 கொரிந்தியர் 13 : 11-13 16 மே, 2017 செவ்வாய்
“சகோதரருக்குச் சமாதானமும், விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.” – எபேசியர் 6 : 23
வாழ்த்துக்கள் பலவிதம். `நீடூழி வாழ்க’ `வாழ்க வளமுடன்’ `சுகமாக இருங்கள்’ இப்படிச் சரீர வாழ்வின் செழுமையை மையப்படுத்தியே பெரும்பாலான வாழ்த்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் தியான வசனத்தில் தூய பவுலடியார் கூறும் வாழ்த்துதலோ வித்தியாசமானது. அவர் கடவுளால் `பிடிக்கப்பட்டதின்’ நோக்கத்தை அவரது கடிதங்களின் துவக்கத்திலும் முடிவிலும் வரும் வாழ்த்துக்களில் கூட அறிவிப்பதற்குப் பவுல் மறந்ததில்லை. கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தினால் கிடைக்கும் மீட்பையும் மீட்பினால் கிடைக்கும் சமாதானத்தையும், மீட்கப்பட்டவர்கள் வாழவேண்டிய அன்பின் வாழ்க்கையையும் வலியுறுத்துவதில் பவுல் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அழிவுக்குரிய உலக வாழ்வின் செல்வங்களைப் பெறும் ஆவலை விட அழிவில்லாத ஆன்மீக வளங்களை விசுவாசிகள் பெறவேண்டும் என்கிற பவுலடியாரின் பேராவல் சிந்தனை வசனத்தில் பிரதிபலிக்கிறது.
`சரீர வாழ்வுக்குத் தேவையானவற்றைப் பெற்று வாழ்க’ என்று வாழ்த்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் நிலையான பரலோக இன்பத்தை இழந்துவிட்டு, நிலையற்ற உலக வளங்களை மட்டும் நாடுவதில் என்ன பயன்? உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் எப்படி முக்கியமானவையோ, அப்படியே சரீரத்தைவிட ஆன்மாவும், உலகத்தைவிட பரலோக வாழ்வும் அதிக முக்கியமானவைகளல்லவா? பூமியிலுள்ளவைகளையல்ல, கிறிஸ்து கடவுளின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளையே தேடுங்கள்.
ஆன்மீக வாழ்வின் வளர்ச்சியில் நாம் குழந்தைகளாகவே இருப்பது சரியல்ல. `ஐஸ்கிரீம் வேண்டும்’ `கூடிலள வேண்டும்’ என்று கேட்கும் குழந்தைகளைப்போல `சுகம் வேண்டும்’, `வேலை வேண்டும்’, `பணம் வேண்டும்’ என்று கேட்காமல் பெரியவர்களான பின் விசவாசம், சமாதானம், அன்பு இவைகளில் பெருகி வாழ விரும்புவதும் வாழ்த்துவதும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளங்களாகும். அன்பின் இலக்கணம் ஆண்டவர் இயேசு. சமாதானப்பிரபு ஆண்டவர் இயேசு. அவரில் விசுவாசம் வைத்து வாழவும் பிறரை வாழ்த்தவும் ஆவியானவர் அருள் புரிவாராக.
உன்னதமான கர்த்தரே, அன்பிலும், சமாதானத்திலும், விசவாசத்திலும் வளரும்படி பிறரை வாழ்த்தும் ஞானத்தை அருளும். இயேசுவின் வழியே ஆமேன்.
