உபாகமம் 31 : 1-5                                                           15 மே, 2017 திங்கள்

“அதற்கு அவர்: என் சமுகம் உன்னோடுகூட வரும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்.” – யாத்திராகமம் 33 : 14

பள்ளிக்கூடங்களில் படிக்கும்போது, பெயர் வாசிக்கப்பட்டவுடன், வகுப்பறையில் இருக்கிறவர்கள் உடனே எழுந்து, ‘பிரசன்ட் சார்’ என்றோ, ‘உள்ளேன் ஐயா’ என்றோ சொல்லுகிறோம். Present என்ற சொல்லின் பெயர்ச்சொல் `Presence’ என்பதாகும். கடவுளின் அருள் ஆற்றல் நம்முடன் இருப்பதை கடவுளின் `பிரசன்னம்’ என்று கூறுகிறோம். கடவுளின் இந்தப் பிரசன்னத்தையே தியான வசனத்தில் வரும் சமூகம் என்ற சொல் குறிக்கிறது.

`கடவுளின் சமூகம் எங்கும் இருக்கிறது. மகிமையும், மகத்துவமும், வல்லமையும், மகிழ்ச்சியும் அவர் சமுகத்தில் உண்டு. தேவ சமுகத்தில் பாதுகாப்பு உண்டு. கடவுளின் சமுகம் வழி நடத்துகிறது. கடவுளின் சமூகத்தின் தன்மையைப் பற்றி வேதம் தெளிவாகக் கூறுகிறது. கடவுளின் பிரசன்னம் எங்கும் எப்பொழுதும் இருக்கிறதென்றாலும் `என் சமுகம் உன்னோடுகூட வரும்’ என்று கடவுளே மோசேயிடம் சொல்வது மோசேக்குப் புதிய நம்பிக்கையையும் துணிவையும் உத்வேகத்தையும் தந்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அத்துடன் தெரியாத மக்கள் வாழும் புதிதான கானான் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளக் கடவுள் மட்டுமே துணை நிற்க முடியும் என்ற அசையாத நம்பிக்கையும் மோசேயிடம் இருந்தது. அதனால்தான் வாசிப்புப் பகுதியில் நாம் காண்கிறபடி, `உன் கடவுளாகிய கர்த்தர் தாமே, உனக்கு முன்பாகக் கடந்து போவார்’ `கர்த்தர் தாமே உன்னோடு வருகிறார்’ என்ற வாசகங்கள் மோசேயால் பயன்படுத்தப்படுகின்றன.

எப்படி இருக்கும்? என்ன நடக்கும் என்று அறியாத நமது வாழ்க்கைப் பயணத்தில், மகிமை, மகத்துவம், வல்லமை, மகிழ்ச்சி நிறைந்த கடவுளின் சமுகம் நம்மோடு வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். சோர்வடையும் வேளைகளில் சுகவீன காலங்களில், அச்சம் வரும் நேரங்களில் திகைக்க வேண்டாம்; கலங்கவேண்டாம். ஆற்றல்மிக்க ஆண்டவனின் சமுகம் உங்களோடு இருக்கிறது.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, உமது பிரசன்னம் எப்பொழுதும் எங்களோடிருந்து எங்களைப் பாதுகாத்து வழி நடத்துகிறது என்கிற நம்பிக்கையோடு வாழ அருள் புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.