எபேசியர் 2 : 1-5 12 மே, 2017 வெள்ளி
“சுவிசேஷத்தைப்பற்றி நான் வெட்கப்படேன்… அது இரட்சிப்புக்கேதுவான தேவ வல்லமை.” – ரோமர் 1 : 16
அவமான உணர்வின் வெளிப்பாடு தான் வெட்கம். ஒருவருக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் பல காரியங்கள் உண்டு. செய்யத் தகாதவற்றைச் செய்வது வெட்கத்துக்குரியது என்கிறார் திருவள்ளுவர். இதையே சத்திய வேதம் உள்ளிட்ட ஆன்மீக நூல்கள், தவறு செய்வது வெட்கத்துக்குரியது என்கின்றன. ஆடைகள் அவிழ்க்கப்படுதல், பிச்சையெடுத்தல், கடன் கேட்பது போன்றவையும் வெட்கத்துக் குரியவையே. நல்லவற்றை அல்லது கொடுக்கப்பட்ட பொறுப்புக்களைச் செய்வதற்கு வெட்கப்படவேண்டியதில்லை. `சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்மேல் விழுந்த கடமை’ என்று சொல்லும் பவுலடிகளார் `சுவிசேஷத்தைப் பற்றி வெட்கப்படமாட்டேன்’ என்று சொல்லுவதில் வியப்பொன்றுமே இல்லை. சுவிசேஷம் என்பது இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டது. ஒரு இரகசியம், இரட்சிப்புக்குரிய உண்மைகளின் தொகுப்பு என்ற நம்பிக்கை பவுலிடம் இருந்தது. தியானப் பகுதியில் இரட்சிப்புக்கு எப்படி சுவிசேஷம் கடவுளின் வல்லமையாகச் செயல்படுகிறது என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார்.
தண்டனைகள் வேதனையையும் பயத்தையும் கொடுக்கும். `தண்டனைகளை ஏற்றுக் கொண்டு, வேதனைகளை எனக்காக அனுபவித்து என்னை இயேசு விடுவித்திருக்கிறார்’ என்கிற நற்செய்தி, நமது பயத்தைப் போக்கும் கடவுளின் ஆற்றல் அல்லவா? இந்த ஆற்றல் அழிவிலிருந்து பாவிகளைத் தூக்கி எடுக்கும் கடவுளின் மென்மையான கருவி. பாவமன்னிப்பு என்னும் மகிழ்ச்சியைத் தரும் சுவிசேஷம், கடவுளின் வல்லமையிலிருந்து புறப்பட்டு வரும் கனிவான ஆயுதம். சிலுவையைப் பற்றிய உபதேசமாகிய சுவிசேஷம் அழிந்து போகிறவர்களுக்குப் பைத்தியமாகத் தெரியும். மீட்பை வாஞ்சிக்கிறவர்களுக்கு அது தேவ வல்லமை. அதை நம்பினால் சுவிசேஷத்தைப் பற்றியும், அதை அறிவிப்பதையும் குறித்து நாம் வெட்கமடையமாட்டோம். `சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளை நமக்கும் உண்டு. சீஷராக்கும் நமது பணிக்குச் சுவிசேஷமே பலமாக இருக்கட்டும்.
ஆற்றல் நிறைந்த ஆண்டவரே, இரட்சிப்புக்கு ஆதாரமும் வல்லமையுமாயிருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க உமது ஆவியானவரின் அருளைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
