ஏசாயா 60 : 1-5 12 பிப்ரவரி 2022, சனி
“என்னை நடத்தினார், வெளிச்சத்திலேயல்ல இருளிலே போகும்படி செய்தார்.” – புலம்பல் 3 : 2
சுனாமி என்ற பேரலையால் உடமைகளையும், உயிர்களையும் இழந்த குடும்பங்களுக்கு இது ஒரு காரிருளின் அனுபவமே. இதே போன்றதொரு நிலைமையை அக்காலத்தில் இஸ்ரவேல் சந்திக்க வேண்டியதாயிற்று. வீழ்ச்சி, சிறுமை, பஞ்சம், நியாயக்கேடு, வாசல்கள் பாழ்பட்ட நிலையில் அம்மக்கள் இருளின் அனுபவத்தை பெற்றனர்.
இருள், சீரழிவு மற்றும் தீமையின்ஆக்கப் பொருளாகவும், தோல்வி, அடிமை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு அடையாளமாகவும் உள்ளன. எகிப்தியரைத் துன்புறுத்திய பத்து கொள்ளை நோய்களில் இருளும் ஒன்று. கடவுளே நமது வாழ்க்கையைச் சூழ்ந்துள்ள காரிருளை நீக்குகிறார். கடவுளின் படைப்பிலே முதல் காரியமே நமது வாழ்வில் ஒளியைப் புகுத்தி இருளை மறையச் செய்ததாகும்.
வியாபாரத்தில் நஷ்டம், வியாதி, படிப்பில் தோல்வி, கடன்பாரம், ஜாதியம், வேலையின்மை போன்றவை உன் வாழ்க்கையில் இருளாக மூடி இருக்கலாம். இறைவன் இந்த இருளை தம் வெளிச்சத்தினால் நீக்குவார். இவை எல்லாவற்றினின்றும் நமக்கு விடுதலையுண்டாகும்.
யோபு கூறும்போது அவரின் ஒளியால் இருளை கடந்தேன் என்கிறார். ஒளியாக இறைவன் மனுவுரு எடுத்ததால் இயேசுவைப் பின்செல்கிறவர்கள் இருளில் நடக்க மாட்டார்கள். சகல சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் தன்னை விடுவித்த நாளிலே பக்தனாகிய தாவீது பாடிச் சொல்லிய வார்த்தை என் கடவுளாகிய கர்த்தரே என் இருளை வெளிச்சமாக்குவார் என்பதே (சங்கீதம் 18 : 28). அவரே நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கியிருக்கிறார். ஆகவே இருளின் கிரியைகளான மது, வேசித்தனம், பொய், ஏமாற்று, சகோதரப் பகை ஆகியவைகளைக் களைவோம். வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்வோம். இருளை கடவுள் நம்மை விட்டு அகற்றுவார்.
கடவுள் நீதியின் சூரியனாக இருந்து நம்மை ஆளுபவர். நமது தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், சமுதாயத்தில், திருச்சபைகளில் இறைவெளிச்சம் மங்கி இருள் நிலவுகிறதா? இறை வெளிச்சம் இவ்விடங்களில் வீசச் செய்ய முயல்வோம். கடவுளின் அன்பை அறிந்தால் இருண்ட வாழ்விலும் சந்தோஷம், சமாதானம் வற்றாத நதியாகப் பாய்ந்தோடும். இறை ஒளி எப்போதும் நிறைந்திருக்கும்.
காரிருளில் என் நேச தீபமே! நாங்கள் ஒளியின் மக்களாக வாழ்ந்து உம்முடைய வெளிச்சத்திலே நடக்க அருள்புரியும். அந்தகார கிரியைகள் ஒளியின் ஆற்றலினால் எங்கள் வாழ்வை விட்டு மறைந்து போகட்டும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.