02 பிப்ரவரி, 2021        செவ்வாய்

“நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;….”

– கலாத்தியர் 6 : 9

அமெரிக்காவில், ஜூலை நான்காம் தேதி, அமெரிக்கர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நினைவூட்டுகிற ஒரு விஷயம் என்னவென்றால், சுதந்திரம் இலவசமல்ல. அதற்கான விலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரேஷனில் நமக்கு பல விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கோவிட் 19 காலத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்துமே மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. ஆனால் அதை அரசு விலை கொடுத்துத்தானே கொள்முதல் செய்திருக்கும்? அரசின் பணம் மக்களுக்கு இலவசமாகப் போகிறதே என்று யாரும் நினைப்பதில்லை. நமக்கு இலவசமாகக் கிடைத்த பொருட்களுக்காக வேறு யாரோ பணம் செலுத்தியிருப்பார்கள். மட்டுமல்ல நாமே வேறு எப்போதோ செலுத்திய வரிகளும் கூட அப்படி இலவசமாக நமக்கே திரும்பி வருகிறது. இதில் நாம் உணரவேண்டியது, எதுவும் இலவசமல்ல. நேரடியான அல்லது மறைமுகமான விலை அதற்கு உண்டு என்பதையே.

மற்றவர்கள் இலவசமாக அனுபவிக்க நாம் விலை கொடுக்க வேண்டுமா என்ற எண்ணம் ஆண்டவருக்குக் கசப்பானது. ஆண்டவரின் பிள்ளைகளான நமக்கும் கசப்பாகத்தான் இருக்க வேண்டும். நன்மை செய்வதில் சோர்ந்து போதல் நமது விசுவாசக் குறைவைக் காட்டுகிறது. ஆண்டவரின் அன்பை, கிருபையை, மன்னிப்பை, மீட்பை இலவசமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் நாம். அதற்கான விலையாக இயேசு தன்னையே சிலுவைக்குக் கொடுத்திருக்கிறார். அதன் நன்றிக்கனிகளான நல்ல செயல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நாம் சோர்ந்து போகக்கூடாது. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக, கடவுள்-மனிதனாக வந்தார். அவர் சம்பாதித்த நித்திய ஜீவனை ஒரு பரிசாக நமக்குக் கொடுத்தார். இவையனைத்தும் அவரது சுத்த கிருபையால் மட்டுமே பெறப்பட்டது. நன்மை செய்வதில் சோர்ந்துபோகும்போதெல்லாம் இவற்றை நினைத்துப்பாருங்கள். நாம் பெற்றுக்கொண்ட இலவசங்களுக்காகத் தரப்பட்ட விலையைப் பார்க்கும்போது இவ்வுலகில் நன்மை செய்வதால் நாம் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகக் குறைவே. இயேசுவையே விலையாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். மகிழ்ந்திருப்போம்!

அன்புள்ள கர்த்தாவே, நீர் இலவசமாக எமக்குத் தந்த அளவற்ற ஆசிகளுக்காக நன்றி. அதற்காக நீரே விலையானீர் என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள உதவிசெய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்!