31 ஜனவரி, 2021          ஞாயிறு

“வருந்தியுழைத்துப் பாரம் சுமக்கிறவர்களே…. என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்.”

– மத்தேயு 11 : 28-29

இயேசுவை நம்பி, அவர் வார்த்தைகளை மதித்த பலர் அவருடன் இருந்தனர். அவர்களது வாழ்வு இயேசுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் இயேசு தன்னை எதிர்ப்பவர்களையும், தனது பேச்சை நம்பாதவர்களையும் கூட தினமும் சந்தித்துக்கொண்டுதானிருந்தார். 

உதாரணமாக, இன்றைய தியான வசனத்தின் முன் பின் வசனங்களை வாசித்துப்பாருங்கள். அதன் சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். அவரைப் பின்தொடர்ந்த கூட்டத்தினரிடம் சற்று கடினமாகவே பேசுகிறார். தங்களது தவறுகளைப் புரிந்துகொள்ளாமல் யாரையும் குறைசொல்லுவதையே வழக்கமாக வைத்திருக்கிறவர்கள் என்று குறிப்பிடுகிறார். நாம் சொல்லக்கூடிய எந்தக் கதைகளையும் கேட்க அவர் ஆர்வம் காட்டவில்லை; அதற்கு பதிலாக, அவர் நமது பூரண சரணாகதியையே தேடுகிறார். நம்முடைய ஞானத்தைச் சுமந்துகொண்டு அவரிடம் போவதைவிட ஒன்றுமற்றவர்களாய், குழந்தைகளாய் ஆண்டவரின் வார்த்தைகளை ஏற்றுகொள்ளும் நிலையில், நாம் அவரிடம் வெறுங்கையுடன் வர வேண்டும். அவர் நம்மை நிரப்புவார், தேற்றுவார், வழிநடத்துவார்.

ஆனால் இது எவ்வளவு கடினமான வேலை! நாம் எப்போதும் நாமாகவே இருக்கிறோம். நாம் என்ன பணி செய்கிறோமா அவராக… ஆசிரியராக, அலுவலராக, மருத்துவராக… உலகம் நமக்குத்தந்திருக்கும் இந்த வேஷத்தைக் களைந்துவிட்டு நம்மால் ஆண்டவரிடம் போக முடியுமா? உண்மையில் ஆண்டவருக்குத் தருவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? நம்மிடம் எதுவும் இல்லை என்பதை நாம் பலநேரங்களில் மறந்துவிடுகிறோம்.

ஆனால் நம்முடைய எல்லா தவறுகளுடனும், வெறுமைகளுடனும், இல்லாமைகளுடனும் கடவுள் நம்மை நேசிக்கிறார், நம்மை புதியவராக்க விரும்புகிறார். நாம் அனைவரும் நம்முடைய பிதாவுக்கு முன்பாக பிள்ளைகளாக இருப்போம். அவர் சிலுவையில் நமக்காகச் சம்பாதித்த இரட்சிப்பை அனுபவிப்போம்.

பரலோகத் தகப்பனே, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவரை நெருக்கமாகப் பின்பற்ற கற்றுக்கொடுங்கள். அவருடைய நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.