1 பேதுரு 1 : 3-9                          05 டிசம்பர் 2024, வியாழன்

“கர்த்தர் தமது ஜனத்திற்கு வல்லமையளிப்பார்;” – சங்கீதம் 29 : 11

வாழ்க்கை ஒரு போர்க்களம். துன்பங்கள், சோதனைகள், இடையூறுகள் இவற்றைச் சந்திப்பதுதான் தினவாழ்வு. போராட்டங்களைச் சந்திக்கும் போது, பலர் சோர்ந்து விடுகிறார்கள். பலர் மனநிம்மதி இழந்து விடுகிறோம். போராட்டங்களைச் சமாளிக்க நமக்குப் போதிய பலமில்லையே. இறைக்கும் நீரின் அளவைவிட, சுரக்கும் நீரின் அளவு குறையும் போது, தண்ணீர் வற்றிப்போகும்! கிணறு வறண்டுவிடும்.

தியான வசனத்தைக் கவனியுங்கள். மனிதனுக்கு ஜீவ ஊற்றாக வற்றாத நீரோடையாகப் பாய்ந்து வருபவர் கடவுள். வல்லமையைக் கொடுத்து சமாதானம் தந்து ஆசீர்வதிப்பவர் கடவுள் என்பதை அனுபவித்து இச்சங்கீதத்தை எழுதினார் தாவீது. `கர்த்தர் என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை’ என்று பாடும் மன நிறைவை தாவீதுக்குக் கொடுத்தவர் கடவுள். இந்த ஆசிகளையெல்லாம் தாவீது பெற தாவீதின் புனிதத் தன்மை காரணம் இல்லையே. முற்றிலும் கடவுளின் வல்லமையில் சார்ந்திருந்ததுதான்… தாவீதின் கெட்டிக்காரத்தனம். என்ன முயன்றாலும் பாவத்தை மேற்கொள்ள, பாவத் தண்டனையை மாற்றி அமைக்க மனிதனால் முடியுமா? முடியாதே!

ஆனால், இறைவனால் இதுவும் முடிந்தது. இயேசு கிறிஸ்து, சிலுவையில் உலகத்தவரின் பாவத்தையும், அதன் தண்டனையான மரணத்தையும் வென்றார். அவரில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு இந்த வெற்றியில் இலவசமாகப் பங்கும் தருகிறார். நம்மில் பலமில்லை! நம் ரட்சகரில் பலம் கொட்டிக் கிடக்கிறது. இரட்சகரை ஏற்றுக் கொள்ளுவோம், சார்ந்திருப்போம்! அவரது பலத்தை அனுபவிப்போம், நாம் பலசாலிகளாவோம்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் சமாதான உறவை சம்பாதித்துத் தந்த கர்த்தாவே, உமது பலத்தை மட்டும் சார்ந்திருக்கும் சிந்தையை அடியார்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.