1 சாமுவேல் 17 : 32-37 12 மே 2022, வியாழன்
“தாவீது: சிங்கத்திற்கும் கரடிக்கும் என்னைத் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் என்னைத் தப்புவிப்பார் என்றான்.” – 1 சாமுவேல் 17 : 37(a)
இன்றைய தியானபகுதியில் தாவீது என்ற ஒரு எளிமையான ஆடு மேய்க்கிற சிறுவன் எவ்விதம் பெலிஸ்தியர்களின் மாபெரும் வீரன் என்று அழைக்கப்பட்ட கோலியாத்தை வெற்றிகொண்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுல் இஸ்ரவேலின் இராஜாவாக ஆட்சி செய்தார். இஸ்ரவேல் தேசத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக பெலிஸ்தியர்கள் இருந்தனர். பெலிஸ்தியரின் தலைவனான கோலியாத் தன் புயபலத்தை நம்பி தன்னிடம் சண்டையிட்டு வெற்றிபெறுமாறு இஸ்ரவேல் மக்களை அழைக்கிறான். இந்நிலையில், தாவீது, தான் நம்பும் கடவுளில் நம்பிக்கைக்கொண்டு கோலியத்தை வீழ்த்தினான். இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் தந்த மிகப்பெரிய வெற்றி. அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் தாவீது தந்த வெற்றியாகப் பார்த்தார்கள். தாவீதைப் புகழ்ந்தார்கள். தாவீது அல்ல வெற்றி தந்தது. தாவீதின் கடவுளே வெற்றி தந்தவர் என்பதை தியானபாகத்தில் தெளிவாக பார்க்கமுடியும்.
அன்பானவர்களே இன்று எத்தனை கோலியாத் போன்ற பிரச்சனைகள், போராட்டங்கள். வாழ்க்கையின் சவால்கள் இவைகள் எல்லாம் பாவத்தின் விளைவுகளே.( ரோமர் 5:12)
இயேசுவில் பாவம், பிசாசு முறியடிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு வெற்றியின் வாழ்வு தரப்பட்டுள்ளது. நாம் தனித்து இவ்வுலக போராட்டங்களை எதிர்க்கொள்ளமுடியாது. பல நேரங்களில் நமது வாழ்வின் சவால்களை நாமே சமாளிக்க முயற்சி செய்கிறோம். முடிவில் தோற்று போய் சோர்ந்துபோகிறோம். விசுவாச தளர்ச்சியோடு வாழ்கிறோம். நாம் வெற்றியின் வாழ்வில் தொடர்ந்து வாழ கிறிஸ்துவில் கொண்ட விசுவாசமும், அவர் நமக்கு தந்துள்ள தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் நமக்கு தேவை என்பதை உணர்வோம். உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு; ஆயினும் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொல்லும் நமதாண்டவர் நம்மோடு இருக்கிறார்.
கடவுளே, எங்கள் வாழ்க்கையின் சவால்களை உமது உதவியுடன் எதிர்கொள்ள உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.