ரோமர் 1 : 1-5                              20 அக்டோபர் 2022, வியாழன்

“கடவுள் தம் தீர்க்கதரிசிகளின் மூலமாய்த் தம் குமாரனைப் பற்றிய சுவிசேஷத்தைப் பரிசுத்த வேதவாக்கியங்களில் முன்னமே வாக்களித்தார்.” – ரோமர் 1 : 4

நாஸ்டெர்டாம்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரைப் பற்றிச் சொல்லப்படுவது, இவர் இருபதாம் நூற்றாண்டில் நடைபெறும் பேரழிவுகளைக் குறித்து பதினைந்தாம் நூற்றாண்டிலேயே எழுதி வைத்து இருக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர். இது வரலாற்று பூர்வமாய் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே! பேரழிவுகளின் செய்தியைச் சொன்னவர் நாஸ்டெர்டாம்ஸ்.

காலகாலமாய் இவ்வுலகிற்கு வாழ்வுக்கான செய்தியைத் தந்தவர் கடவுள். நற்செய்தியைத் தந்தவர் கடவுள். இன்றைய தியான பகுதியில், பழையஏற்பாடு முழுமையும் கடவுளால் அனுப்பப்பட்ட நற்செய்தியாம் இயேசுவைக் குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆதி மனிதனைக் கடவுள் உருவாக்கினார். தமது சாயலில் உருவாக்கினார். படைப்பின் மகுடமாய் உருவாக்கினார். ஆனால் ஆதி மனிதனோ கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனதால் பாவம் உலகத்தில் வந்தது. பாவ உலகை மீட்க மேசியாவின் வருகை அவசியம் என்பதைக் கடவுள் உணர்த்தினார். வாக்குத்தத்தங்களைத் தர துவங்கினார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற கடவுள் தமக்கென்று இஸ்ரவேலை சொந்த ஜனமாகத் தெரிந்துக்கொண்டார். தொடர்ந்து அம்மக்களுக்குத் தமது இறைவாக்கினர்களைக் கொண்டு மேசியாவின் வருகைக்கான வாக்குத்தத்தங்களை தந்து வந்தார். மனுகுலத்தின் வாழ்வுக்கான கடவுளின் திட்டமே மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்கள்.
கடவுள் வாக்குத்தங்களை நிறைவேற்ற வல்லவர். கடவுளின் வாக்கான இயேசுவைக் காலம் நிறைவேறின போது இவ்வுலக மீட்பிற்கு அனுப்பினார். தமது சொந்த ஜனமாகிய இஸ்ரவேலிடம் அனுப்பினார். அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினால் வரும் பாவமன்னிப்பின் நற்செய்தி பவுலின் வழியாக யூதர் அல்லாதவர்க்கு அறிவிக்கப்பட்டது.

வாக்களிக்கப்பட்ட நற்செய்தி இன்று நமக்கும் அறிவிக்கப்படுகிறது. இயேசுவே நற்செய்தி. இயேசுவினால் கிடைக்கும் பாவமன்னிப்பின் வாழ்வே ஜீவனுள்ள வாழ்வு. உங்களுக்கும் எனக்கும் வாழ்வு தரும் இயேசுவின் வாக்குத்தத்தங்கள் உரியது. வாக்களிக்கப்பட்ட கடவுளின் வார்த்தையை நம்புவோம்! நற்செய்தியின் வழியாக வாழ்வு பெறுவோம்!

வாக்குத்தத்தங்களைத் தரும் இறைவா! உம்முடைய வாக்குத்தத்தங்களின் நிறைவே இயேசு ஆண்டவர் என்பதை நம்பி அவரில் நித்தியஜீவன் என்பதை விசுவாசித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.