யோவான் 14 : 6-7 26 செப்டம்பர் 2022, திங்கள்
“இயேசு அவனிடம் : வழியும் சத்தியமும் ஜீவனும் நானே, என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடம் வரான்.” – யோவான் 14 : 6-7
நமது வாழ்க்கை, இரட்சிப்பு, சத்தியம், ஞானம் என்று வரும் வேளையில் அங்கே இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வைக்க வேறு எதுவும் தகுதியானதல்ல. பொருத்தமானதுமல்ல. யாரும் எதுவும் அவருக்கு ஈடாகவே முடியாது. அதுபோலவே நீங்கள் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க, அவருடைய ஆசீர்வாதங்களை, அவர் தருகிற பாதுகாவலை, அவருடைய கிருபையைத் தேடிக் கண்டுபிடிக்க நினைத்தால் அதற்கான ஒரே வழி, உறுதியான வழி இயேசு. இயேசு மட்டுமே. இயேசுவை, அவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள்.
இறை வார்த்தையாகிய திருமறையில் இயேசு கிறிஸ்து யார் என்பதைத் தெளிவாக, சற்று ஆழமாக உற்று நோக்குங்கள். இன்று, தம்மைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்பதை சற்று கவனியுங்கள். அவரே வழி, சத்தியம், ஜீவன் என்று சொல்லுகிறார். இப்படி உங்களோடு சொல்வதற்கு உலகில் வேறு எவரும் இல்லை. அவரைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள தூய யோவான் எழுதிய நற்செய்தி நூலை வாசியுங்கள், இது சுமார் 50 பக்கம் மட்டுமே உள்ளது அவ்வளவே. இதனால் இயேசுவோடு, இன்றே ஒரு வலிமையான உறவில் வர அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு இணையாக வேறு ஒருவரையும் நீங்கள் காணவே முடியாது. அதற்கு நான் உறுதி கூறுகிறேன். உலகத்தில் பல்வேறு சமயகுருமார், தத்துவ ஞானிகள், தலைவர்கள், குருமார் எனப் பலரைக் காண்கிறோம். ஆனால் இரட்சகர் இயேசுவுக்கு இணையானவர் எவருமில்லை. இந்த இயேசுவுடன் வாழ்க்கை எனும் பாலத்தில், கவலையின்றி நீங்கள் உங்கள் பணியைத் தொடரலாம். இயேசு என்னும் பாதுகாப்பு வலையில் நம்பிக்கை வைத்து உங்கள் பணியை தொடரலாம். சிலுவையின் வல்லமை அவருடைய உயிர்த்தெழுதல் இவற்றால் அவரை உங்கள் இரட்சகராக நம்பி பயமின்றி வாழ்க்கையைத் தொடருங்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு அருளுவாராக.
ஆண்டவராகிய இயேசுவே, எனது இரட்சகராக நீர் இருப்பதற்கு நன்றி சொல்லுகிறேன். மனிதனாக பிறந்து சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உமது உயிர்ப்பின் வழியாக எமக்கு நித்திய வாழ்வை பரிசளிக்க வந்ததற்கும் நன்றி எனது பயத்தை மாற்றும் உம்மீது வைத்துள்ள விசுவாசத்தின் வல்லமையால் நான் பயமின்றி வாழ்வது போல் பிறருக்கும் அதைக்காட்ட என்னை வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.