யாத்திராகமம் 19 : 1-6 09 மே 2022, திங்கள்
“நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜனமுமாயிருப்பீர்கள்.” – யாத்திராகமம் 19 : 6
தியான பகுதியில் கடவுள் விடுதலையாக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை சீனாய் மலையண்டைக்கு கொண்டு வந்தார். அங்கு அவர்களுக்கான விடுதலையின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாக, ஆசாரிய இராஜ்யமாகவும், பரிசுத்த தேசமாக இருப்பார்கள் என்று கடவுள் கூறினார். கடவுள் அவர்களுக்கு இத்தனை சிறப்பான தகுதியைத் தந்தார். காரணம் அவர்கள் பூமியில் உள்ள சகல மக்களையும் உண்மையான கடவுளிடம் கொண்டு வரவேண்டும் என்பதே.
ஆசாரிய இராஜ்யமாக தெரிந்தெடுத்தார். ஆசாரியர்கள் யார்? அவர்கள் மற்றவர்களை கடவுளிடம் கொண்டு வருகிறவர்கள். கடவுளின் வார்த்தையை அவர்களுக்குச் சொல்லுகிறவர்கள். தொழுகையிலும், ஜெபத்திலும் கடவுளிடம் அவர்களை வழிநடத்துகிறவர்கள் ஆசாரியர்கள்.
இஸ்ரவேலின் திருப்பணி முழு மனுகுலத்தையும் உண்மையான கடவுளிடம் கொண்டுவருவதே. ‘என் ஜனம் என் புகழை பிரஸ்தாபப்படுத்தும்’ என்ற திருவாக்கின் படி இஸ்ரவேல் மக்கள் இத்திருப்பணி செய்து வாழ்வதே அவர்கள் வாழ்வின் நோக்கம். ஆனால் அவர்களோ தங்களின் கீழ்ப்படியாமையினால், நம்பிக்கை அற்று வாழ்ந்தார்கள். விளைவு மனுக்குலம் பாவ இருளின் பிடியில். கடவுள், முழு மனுகுலத்திற்கும் வாழ்வு என்கின்ற தமது நோக்கத்தை நிறைவேற்ற தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவைப் பிரதான ஆசாரியராக அனுப்பினார்.
இன்று கடவுள், இயேசுவை விசுவாசிப்பவர்களைத் தமது இராஜ்யத்தின் ஆசாரியர்களாக தெரிந்துக் கொள்ளுகிறார்.
இன்று நாம் மீட்பு பெற்றவர்கள். கடவுள் இராஜ்யத்தின் ஆசாரியர்கள். நமது பணி மற்றவர்களை கடவுளிடம் அழைத்து வருவது அல்லவா. அதோடு கடவுளின் வார்த்தையை சொல்லவேண்டும். கடவுளின் அன்பு இயேசுவில் வெளிப்பட்டது என்பதை பகிர்ந்துகொள்ளவேண்டும். நம்மில் இருக்கும் தூயாவியானவர் நமக்கு உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். அவரின் உதவியோடு நமது ஆசாரிய பணியைச் செய்வோமாக.
அன்பின் இறைவா! உமது குமாரனாகிய பிரதான ஆசாரியரான இயேசுகிறிஸ்துவில் எங்களை உமது இராஜ்யத்தின் ஆசாரியர்களாக தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.