ஆதியாகமம் 45 : 3-8 12 ஆகஸ்ட் 2022, வெள்ளி
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னித்திருக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” – மத்தேயு 6 : 12
‘மன்னிப்பு’ எனும் சொல்லே, இன்றைய உலகில் மனித நேயத்தைக் கட்டி எழுப்பும் தாரக மந்திரம். எல்லாரையும் இணைக்கும் தெய்வீக குணம்.
தியானப்பகுதி, ஆண்டவர் இயேசு தம் சீடருக்குக் கற்றுக் கொடுத்த ஜெபத்தின் ஐந்தாம் மன்றாட்டைக் குறிப்பிடுகின்றது.
திருமறையில் பாவியான ஒருவர் கடனாளியாகவும், கடவுள் தமது பாவ மன்னிப்பினால் அந்த கடனைத் நீக்குபவராகவும் விளக்கப்படுகிறது.
இந்தக் கடனை நீக்குகிற செயல் முழுமையானது. சுத்திகரித்தல், கழுவுதல், ஏற்றுக் கொள்ளுதல் என்ற கருத்துக்கள் மன்னிப்புடன் இணைந்தே வருகின்றன. மன்னிக்கின்ற மனம் வேறுபட்ட இரு தரப்பாரையும் ஒன்றாக்குகிறது.
கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார். தவறிய மக்களுக்கு மறு வாழ்வுக்கான வாய்ப்பு கொடுத்து தம்மோடு இணைக்கிறார்.
மனுக்குலம் பாவம் செய்து தேவ மகிமையை இழந்தது. இயேசு எல்லாருக்காகவும் பாவ நிவாரண பலியாக மரித்தார். ஒரு பாவி தனது பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கை செய்து மன்றாடும்போது கடவுள் மன்னித்து அவனை அரவணைக்கிறார். நினிவே மக்கள் மனந்திரும்பிய போது கடவுள் தாம் முன்னுரைத்த தண்டனையை விலக்கினார். தம்மை ஏற்றுக் கொள்ளாத சமாரிய மக்களை இயேசு அழிக்கவில்லை. எவரும் அழிந்து போகாதபடி கடவுள் தமது குமாரன் இயேசுவை உலகில் அனுப்பினார்.
இம்மன்றாட்டை ஆராயும்போது, ‘மன்னித்திருக்கிறது போல’ என்ற வார்த்தை மன்னித்தால், மன்னித்திருக்கிற அளவின்படி, மன்னிக்கிற தன்மை என்ற பல கோணங்களைக் கொடுத்தாலும் கடவுள் அருளும் மன்னிப்பு மட்டுமே முதன்மை பெறுகிறது. நாம் மன்னித்தால்தான் இறைமன்னிப்புக் கிடைக்கும் என்பது பொருளல்ல.
இறைக் கிருபையினால் நாம் தினமும் மன்னிக்கப்படுகின்றோம். மன்னிக்க வேண்டும் என்று கற்பித்த இயேசு, சிலுவையில் தம்மை அறைந்தவர்களுக்காக மன்றாடினார். இறையடியார் ஸ்தேவானும் அம்மாதிரியை சாவிலும் பின்பற்றினார்.
பழிவாங்குதல், வன்மம் என்கிற பாவங்களுக்கு எதிரான நிலை மன்னிப்பே. ‘தீமையை நன்மையினாலே வெல்ல வேண்டும்’ இயேசுவில் இறைவனின் மன்னிப்பைப் பெற்றவர்கள் நாம். பிறரையும் மன்னித்து வாழ்வோம்.
இறைவா! உம்மால் மன்னிக்கப்பட்ட நாங்கள், பிறர் குற்றங்களையும் அன்பினால் மன்னித்து வாழ்ந்திட, எங்களைப் பெலப்படுத்தியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.