அப்போஸ்தலர் 20 : 17-38                    17 மார்ச் 2023, வெள்ளி

“என் உயிரை ஒரு பொருட்டாக மதியேன், அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தை முடிக்கவும், கடவுளுடைய கிருபையின் சுவிசேஷத்தை வற்புறுத்திக் கூறும்படி ஆண்டவராகிய இயேசுவினிடம் நான் பெற்றுக்கொண்ட ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.”
– அப்போஸ்தலர் 20 : 24

கடவுளை அரசராகவும் மேய்ப்பராகவும் கொண்டு வாழ அழைக்கப்பட்ட இஸ்ரயேலர் கடவுளின் மந்தை என்று அழைக்கப்பட்டனர். புதிய ஏற்பாட்டுத் திருச்சபையும் அம்மந்தையின் வழித்தோன்றல்தான். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து. நமது நல்ல மேய்ப்பனாக உள்ளார். “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறவர் என்று குறிப்பிடுகிறார். தம்மையே சிலுவையில் பலியாக தேவ ஆட்டுகுட்டியாக ஒப்புக் கொடுத்தார். தம்மைப் பின்பற்றிய சிறுபான்மையினரான சீடர்களைப் பார்த்து அவர்களின் சிறுமையையும் குழந்தை நிலையையும் எண்ணி ‘சிறு மந்தையாகிய நீங்கள் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்” என்றார்.

சீடர்களை ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல அனுப்பினார். “ஆயரை வெட்டுவேன் அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்று இயேசு தம் இறப்பிற்கு முன் கூறியது தம்மைப் பின்பற்றிய சீடர்களின் நிலையைக் குறிப்பதாக இருக்கிறது. “என் ஆடுகளை மேய்” என்று இயேசு பேதுருவுக்கு கொடுத்தக் கட்டளை. ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னும் அறிக்கை(எபி13:20) செய்வது நமது வாழ்வின் சாட்சியாகும். உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள் என்று பேதுரு திருச்சபையின் ஊழியர்களுக்குக் கூறும் ஆலோசனை (1பேது 5:2). நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போலிருந்தவர்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திருப்பப்பட்ட நிலையில் இருப்பதே திருச்சபை என்னும் அவர் கூற்று (1பேது 2:25) ஆகியவை இந்த உண்மையின் வெவ்வேறு துருவங்களைச் சுட்டுகின்றன. மந்தை என்ற பெயரும் கூட்டுறவும் பெற்றுவிட்டால் எல்லாரும் ஒருங்கே மேய்ப்பருக்கும் கீழடங்கும் உத்தமர்கள் ஆவர்.

கண்காணிப்பாளருக்கும் மந்தையாகிய திருச்சபைக்கும் உள்ள கடமைகளை எடுத்துரைக்கிறார் பவுல். அதுமட்டுமல்லாது தான் வாழ்ந்த வாழ்விலும் இதில் நேர்மையாக இருந்ததை எடுத்துகாட்டுகிறார். எல்லோருக்கும் திருப்பணியாற்றினார் (யூதர்கள், கிரேக்கர்கள்), எல்லா துன்பங்களையும் அனுபவித்தார், மந்தையை கவனத்துடன் காத்துக் கொண்டார், வழி தவற விடவில்லை, வெள்ளிக்கோ பொன்னுக்கோ ஆசைப்படவில்லை, பவுலின் தனிபட்ட தேவைகளை அவரே உழைத்து பெற்றுக்கொண்டார், இறைவேண்டல் செய்துக்கொண்டே இருந்தார். பவுல் தன் வாழ்வையே எடுத்துகாட்டாகவும் வழிபாடாகவும் நற்செய்தியாக மாற்றினார். கண்காணிப்பாளராகவும் மந்தையாகவும் உள்ள நாம் நம்மை திரும்பி பார்க்க அழைக்கப்பபடுகிறோம்.

அன்பின் கடவுளே, நீர் எங்களை ஒரே மந்தையாக வழிநடத்த நீர் தந்த மெய்யான நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவிற்காக நன்றிச் செலுத்துகிறோம். நாங்கள் உமது மந்தையில் நிலைத்து வாழ உதவிச் செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.