லூக்கா 24 : 50-53 19 ஏப்ரல் 2021, திங்கள்
“அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.” – லூக்கா 24 : 51
இயேசுவின் விண் ஏற்றக் காட்சியை லூக்கா தன்னுடைய நற்செய்திப் பகுதியில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு வரிதான் நமது தியானப் பகுதி. அப்போஸ்தலர் நடபடியும் லூக்காவால் எழுதப்பட்டதுதான். அதில் லூக்கா ‘எப்படிப் போகக் கண்டீர்களோ அப்படியே வருவார்’ என்று தேவதூதர் கூறியதாக எழுதி வைத்திருக்கிறார்.
விண்ணகம் சென்ற இயேசுவை சீடர்கள் நேரில் பார்த்தனர். ‘சாமானிய மனிதராக’ மனித உருவிலேயே இயேசு விண் ஏறினார். உயிர்த்தெழுந்த இயேசு ஒரு மாய உருவம் அல்ல. விண்ணக ஏற்றம் ஒரு மாயஜாலம் அல்ல. இயேசுவின் விண்ணக மண்ணகத் தன்மைகள் இரண்டும் பிரிக்கப் படமுடியாமலிருந்தன. இதற்கு விண்ணக ஏற்றம் தக்கதொரு சான்று.
இதன் பின்பு சீடர் தனிமையை உணர்ந்தனர். ஒரே வீட்டில் எல்லோரும் ஒன்றாக அடைந்துகிடந்தனர். கொஞ்சம் விசுவாசத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் கைவிடப்பட்ட உணர்வு வாட்டியது. நமது நோயின் தாக்கத்தால் நாம் தனியர்களாக உணர்கிறோம். பாவம் செய்து, அவமானப்பட்டு, தலை குனிந்து வாழும் போது ஓடி ஒளிந்துகொள்ள நினைக்கிறோம். இந்த நிலைதான் ‘மேய்ப்பனில்லாத ஆடுகளின்’ நிலை. நமது நித்திய மேய்ப்பராகிய இயேசு விண்ணகத்தில் மட்டுமல்ல, மண்ணகத்திலும் நம்மோடு இருக்கிறார். ‘உலக முடிவு மட்டும் நான் உங்களோடிருக்கிறேன்’ என்று இயேசு உறுதியாக நமக்குத்தான் சொல்லிருக்கிறார். ஆகவே கலங்க வேண்டாம். திகைக்க வேண்டாம். அங்கே இருக்கிற ஆண்டவர் இயேசு இங்கேயும் இருக்கிறார். இது மட்டுமல்ல! அவர் திரும்ப வல்லமையோடு வருவார்! விழித்திருங்கள்.
மண்ணுக்கும் விண்ணுக்கும் உரியவரே! எங்கள் ஆண்டவர் விண்ணுக்கு ஏறினாலும், அவர் எங்களோடு உலகில் வாழுகிறார் என்ற உறுதியான நம்பிக்கையைத் தந்தருளும். விண் ஏறிய இயேசு வழியே ஆமேன்.
