மத்தேயு 7 : 15-23                    10 பிப்ரவரி 2022, வியாழன்

“உன் தீர்க்கதரிசிகள் உன் பொருட்டு வீணும் வியர்த்தமுமான தரிசனங்கண்டார்; உன் துன்ப நிலைமையை மாற்றுமாறு உன் அக்கிரமத்தை உனக்கெடுத்துக் காட்டவில்லை…” – புலம்பல் 2 : 14

எருசலேமின் அழிவுக்குச் சமயத் தலைவர்களும் ஒரு காரணம் என்று கூறலாம். தீர்க்கர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை மக்களுக்கு எடுத்துக் கூறாது மக்களை பிரியப்படுத்தத் தேவையான பொய்யான தீர்க்கதரிசனங்களைக் கூறி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்ற தீர்க்கதரிசி நிச்சயமாக பிறருடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்த வேண்டும். ஏனெனில் ஆவியானவருடைய முக்கியமான செயல்பாடு பாவத்தை கண்டித்து உணர்த்துவது.

இன்றைக்கு சரீரத் தேவைகளைக் குறித்தும் இவ்வுலக வாழ்வுக்குரிய ஆசீர்வாதங்களுமே சபைகளிலும், விசுவாசிகளிடையேயும் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் பாவம், நரகம், மோட்சம் கிறிஸ்துவின் வருகை, நியாயதீர்ப்பு, இரட்சிப்பு இவைகளை நாம் மறந்திடல் ஆகாது.

பணம், பொருள், புகழ் இவற்றை மையமாக வைத்து தீர்க்கதரிசனங்கள் அமைந்திடல் தவறானது. நாம் மிகவும் எச்சரிப்பாகவும் விழிப்புணர்வுடையவர்களாகவும் இருக்க வேண்டும். உண்மையான தீர்க்கதரிசி திருச்சபையோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். சபைக்காகவும் சபையின் பக்தி விருத்திக்காகவுமே மனிதனுக்கு வரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆதாயம் பெறவும் திருச்சபையைப் பிரிக்கவும் அல்ல. உண்மையான தீர்க்கதரிசி திருச்சபை தொழுகைக்கும், இராப்போஜனத்தில் பங்கெடுக்கிறவனுமாயும் திருச்சபைக்கு உழைக்கிறவனுமாயிருக்க வேண்டும்.
பரிசுத்த யோவான் தன் நிருபத்தில் உலகத்தில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் ஒவ்வொரு ஆவியையும் நம்பி விடாமல் அவை கடவுளால் உண்டானவையோ என்று சோதித்தறியுங்கள் என்று கூறுகிறார்.

வளம் நிறைந்த வார்த்தையால் கவரப்படாதே:
இடங்கொடு இறைவார்த்தை உன்னைக் கவர்ந்து கொள்ளும்!

ஞானத்தின் ஊற்றே; பொய் ஆவியினால் மக்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசன அடையாளம் காணவும் மக்கள் அவர்கள் தந்திரவலையில் சிக்காதபடி காத்தருள வேண்டுமென்றும் மன்றாடுகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.