மார்க்கு 7 : 8-13 04 ஜனவரி 2022, செவ்வாய்
“….அப்பொழுது ராஜா எழுந்திருந்து,… அவளை வணங்கி…. அவளுக்கு ஒரு ஆசனம் அளித்தான்.” – 1 இராஜாக்கள் 2 : 19
மாதா, பிதா, குரு, தெய்வம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். இவை முதாதையரின் கருத்துள்ள மூதுரை. இந்த இரு கருத்துக்களிலும் தாய்க்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் இருத்துவோம்.
சாலொமோன் என்பவர் அரசாண்டு கொண்டிருந்தார். அவர் அன்னை பெயர் பத்சேபாள். ஒரு நாள் பத்சேபாள் சாலொமோனைச் சந்திக்க வந்தார்.
அப்போது அரசர் சாலொமோன் தன் அன்னையை எப்படி வரவேற்றார்? மரியாதை செய்தது எப்படி? இதுதான் இன்றைய தியானப்பகுதி.
சாலொமோன் நாட்டுக்கு மன்னர். ஆனால் பத்சேபாளுக்கு மைந்தன்தானே! இங்குத் தன் தாய்க்கு மரியாதை தந்த தனயன். இரட்சகர் இயேசு கிறிஸ்து உண்மையான கடவுள். இருப்பினும் மெய்யான மனிதனென்ற நிலையில் ஒரு மைந்தனுக்குரிய கடமையை, தன் தாய் மரியாளுக்கு நிறைவேற்றினார்.
சிலுவையில் சொன்ன வார்த்தைகள் ஏழில் ஒன்று, இயேசு தன் தாய்க்குக் கொடுத்த பராமரிப்புப் பற்றியதுதானே!
பரமத் தந்தை பெற்றோரை மதிப்பது பற்றி பத்து கட்டளைகளில் தமது சித்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் ஒன்று, பெற்றோரை மதித்தல் பற்றியது. வேறு எந்தவொரு கட்டளையையும் விட இது சிறப்பு வாய்ந்தது.
“நீ நன்றாயிருப்பதற்கும், பூமியில் நீ நெடுநாள் இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டுமென்பதே வாக்குத்தத்தத்தோடு கூடிய முதல் கற்பனை” (எபேசியர் 6 : 3)
பிள்ளைகள் தந்தை தாய்க்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தாக வேண்டும். இதனை “மகனே, உன் தந்தையின் உபதேசத்தைக் கேள், உன் தாய் போதிப்பதைத் தள்ளாதே” (நீதிமொழிகள் 1 :*8) என்றார் சாலொமோன் ஞானி.
ஏழைத் தந்தை ஒருவர் மிகவும் சிரமப்பட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். அவர் மகள் ஒருத்தி வேலைக்குச் சென்றாள். சம்பளம் வாங்கினாள். தன் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஜெப வீட்டில் தசம பாகத்தைக் காணிக்கையாக வைத்தாள். ஆனால் பெற்றோரைக் கவனிக்கவில்லை; உடன் பிறப்புகளுக்கு ஆதரவளிக்கவில்லை. இதைப் பரம தந்தை அங்கீகரிப்பாரா? பெற்றோரை, வயதில் பெரியவர்களைக் கவனிப்பது சமீபகாலங்களில் மிகவும் சிரமமான வேலையாக பலராலும் நினைக்கப்படுகிறது. ஆனால் அதுவும் இறைவன் நமக்குத் தந்திருக்கும் கடமைகளில் ஒன்று என்பதை மறவாதிருப்போம்.
பெற்றோரை மதிப்போம்! அவர்களைப் பேணுவோம்! இறைவன் தமது ஆசீர்வாத வாக்குறுதியை நம் வாழ்வில் நிறைவேற்றுவார் – நிச்சயமாக!
பரம தந்தையே! என் பெற்றோர், நீர் கொடுத்துள்ள பெரும்பேறு. இதை உணர்ந்து பெற்றோரை மதித்து வாழ்ந்திடக் கிருபை புரிவீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.