மத்தேயு 19 : 27-30                            23 ஏப்ரல் 2024, செவ்வாய்

நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டு…. சுதந்திரமாவதற்கென்று…. பரிசுத்த ஆவியை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்தருளினார்.” – தீத்து 3 : 6-7

இயேசுவின் கிருபையினால் நீதிமான்களாக மாற்றம் அடைந்துள்ளோம். அவர் பரிசுத்த ஆவியானவரை நிறைவாய் தந்தருளி நீதியுள்ள வாழ்வை வாழ நம்மை அழைக்கிறார்.

அநேக நற்செய்தி கூட்டங்களுக்கு சென்றிருப்போம். நற்செய்தியாளரின் சாட்சிகளை கேட்டிருப்போம். அவர்களது வாழ்வு முதலில் கீழ்படியாத வாழ்க்கையாக, போதை பொருட்களுக்கு அடிமைப்பட்ட, இச்சைகளுக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையாக இருந்து பிறகு கடவுளின் அன்பை உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நம் அனைவருக்கும் இத்தகைய அனுபவங்கள் இருக்கும். இயேசுவின் அன்பு ஓர் நாள் நமது பாவங்களை உணரும்படி செய்திருக்கும். அவரின் இரக்கம் கிடைத்ததை பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிதாக்கினதை உணர்ந்திருப்போம்.

சவுலின் வாழ்வும் அப்படிதான் இருந்தது. இயேசு சவுலை சந்தித்தபோது கடவுளின் கிருபையையும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடந்துதலையும் பெற்றார். அதன்பின் பரிசுத்தமுள்ள நீதியுள்ள வாழ்வு வாழ்ந்தார்.

மக்கள் துன்பங்களிலும், நோய்களிலும் உதவியின்றி வாழும் போது அவர்களுக்கு உதவி செய்யவே நம் வாழ்வை நிறைவாய் கடவுள் வைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முடன் வாழ்வதால் பிறருக்கு நல்ல சமாரியனாக வாழ அழைக்கப்படுகிறோம். நிறைவு என்பது மனநிலையை பொறுத்தது. நமக்கு கடவுள் தரும் ஆசீர்வாதங்கள் பிறருக்கு நாம் அளிப்பதற்காக என்பதை உணர வேண்டும்.

நாமும் கடவுளின் கிருபையினால் நீதிமான்களாக வாழ்கிறோம். நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெறுவோம். நாம் ஆவியானவரின் மூலம் நடத்தப்படுகிறோம். இது நமது கிரியைகளினால் கிடைப்பது அல்ல கடவுளின் சுத்த கிருபையால் பெறுகிறோம்.

அன்புள்ள கடவுளே! உமது கிருபையினால் நீதிமானாக வாழ்வதற்கு ஆவியானவரின் உதவியை தினமும் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.