யோவான் 21 : 1-7                                        23 ஏப்ரல் 2022, சனி

“சீமோன் பேதுரு… மீன் பிடிக்கப் போகிறேன்.” – யோவான் 21 : 3

சில அனுபவங்கள் நம் வாழ்வை புரட்டிப் போடுகின்றன. சில அனுபவங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயேசுவின் மரணம் சீடர்கள் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயேசுவின் சீடர்களில் பெரும்பான்மையோர் மீன்பிடி தொழில் செய்தவர்கள். இயேசு மனிதர்களை பிடிக்க அழைத்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடு பயணித்தார்கள். இயேசுவின் அருளுரைகளையும் அற்புதங்களையும் கண்டார்கள்.

இயேசுவை மக்கள் பார்த்த பார்வைக்கும் சீடர்கள் பார்த்த பார்வைக்கும் வேறுபாடு இருந்தது. இதனால்தான் என்னையாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது பேதுரு நீர் ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று பதிலளித்தார்.

இயேசுவினிடம், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட் டார்கள். இந்த கேள்வி சீடர்களின் உள்ளத்தில் இருந்த ஆசையை, எதிர்பார்ப்பை நமக்கு வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் இயேசு மரித்தார். சீடர்களின் நம்பிக்கை தகர்ந்து போயிற்று. இயேசு உயிர்த்து காட்சி அருளினார். ஆனாலும் திட்டமான ஒரு முடிவுக்கு சீடர்களால் வரமுடியவில்லை.

பேதுருவுக்கு மீன்பிடி தொழில் புதிதல்ல. இயேசு அவரை அழைத்ததே இங்குதான் நடந்தது. இந்த அழைப்பை மறந்து இயேசுவின் மரணத்தால் விசுவாசத்தில் வீழ்ந்து போனார்கள். பேதுரு, தோமா, நாத்தான்வேல், யோவான், யாக்கோபு இன்னும் இரண்டு பேர் ஆகியோர் பேதுருவின் தலைமையில் மீன்பிடிக்க சென்று விட்டார்கள்.

இயேசு மனிதர்களை பிடிக்க அழைத்த அழைப்பை மறந்தார்கள். தங்கள் வலைகளை தேடி கண்டுபிடித்து பழுதுபார்த்தார்கள். தங்கள் படகுகளை சரிசெய்து தங்கள் பழைய வாழ்க்கையை தேடி சென்றுவிட்டார்கள்.

சீடர்கள் இயேசுவின் அழைப்பை மறந்து மீன்பிடிக்கச் சென்றதை அறிந்த நமது ஆண்டவர், சீடர்கள் இருந்த இடத்திற்கு சென்றார். சீடர்களை கடிந்து கொள்ளவில்லை. கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி சீடர்களை பயமுறுத்தவில்லை. பெருங்காற்றை அனுப்பி அலைக்கழிக்கவில்லை.

இயேசு சீடர்கள் மீது கொண்ட அன்பினால் கரையில் நிற்கிறார். கரிசனையோடு சீடர்களிடம், ஒன்றும் அகப்படவில்லையா என்று கேட்டார். வலையை வலதுபக்கம் போட சொன்னார். போட்டு திரளான மீன்களைப் பிடித்தார்கள். கடந்த கால அனுபவத்தின் அடித்தளத்தில் இயேசுவை கண்டு கொண்டார்கள்.

நாமும் இயேசுவை பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கிப்போகிறோம். அழைப்பிற்கு பாத்திரராய் நடந்து கொள்ளுவோம். கிறிஸ்தவ வாழ்க்கை பஞ்சு மெத்தையில் வாழுகின்ற வாழ்க்கையல்ல. எதிர்நீச்சல் போடுகிறவாழ்வு. இதைமறந்து போகக்கூடாது.

அழைத்தவர் உண்மையுள்ளவர். அவரிடம் நம்மை ஒப்புவிப்போம். அவர் துணிவோடு வாழச் செய்வார்.
கடவுளே! உமது பின்னே வந்த நாங்கள் எந்நிலையிலும் உம்மை விட்டு விலகி போகாதபடி காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.