மாற்கு 6 : 35-43             21 டிசம்பர் 2023, வியாழன்

“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து… எல்லாருக்கும் பங்கிட்டார். ” – மாற்கு 6 : 41

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. மனிதர்களின் ஆடைகளில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், எண்ணங்களில் மாற்றம். இந்த நிலை சமய நம்பிக்கை மற்றும் சடங்காச்சாரங்களைக்கூட மாற்றி விடுகின்றன. கிறிஸ்தவமும் இந்த மாற்றத்திலிருந்து தப்பவில்லை. சில வேளைகளில் கிறிஸ்தவர்களும் வாழ்க்கையை சரீர வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை எனக் கூறுபோட்டு இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்பு அற்றவை என்று காட்ட நினைக்கிறார்கள். எனவே தான் ஒரு கிறிஸ்தவனிடம் நாம் காணும் ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை, மறுநாள் திங்கட்கிழமையன்று காணக்கிடைப்பதில்லை. ஆண்டவரின் கற்பனைக்கு எதிராக எப்படியும் வாழலாம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்ற போர்வையில் மறைந்து கொள்ளலாம் என்று நினைத்து வாழுவோரை நாம் கண்டிருப்போம்.

திரளான ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் இருந்தார்கள் என்று அறிந்தபோது அவர்கள் மீது மனதுருகினார் ஆண்டவர் கிறிஸ்து. அதாவது மக்களின் ஆன்மீக வாழ்வில் அவர்களது குறைவைக் கண்டவர் அவர்கள் மீது பரிதபித்தார். வழிகாட்ட அருளுரையாற்றினார். நேரம் போவது தெரியாமல் மக்கள் அவரது வார்த்தைகளில் லயித்திருந்தார்கள். மக்கள் தேவை அறிந்த ஆண்டவரும் தொடர்ந்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். சீடர்களுக்கு இது மனவுறுத்தலைத் தந்தது. இப்படியே போனால் நமது சாப்பாட்டுக்கும் இடைஞ்சல் ஏற்படுமோ என அஞ்சினர். எனவேதான் இவர்களை அனுப்பிவிடும், அவர்கள் போய் அவர்களுக்கான உணவை வாங்கிக் கொள்ளட்டும் எனத் துரிதப்படுத்தினர். ஆனால் ஆண்டவர் பார்வையில் சரீரமும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவர்களது சரீரத் தேவைகளையும் நிறைவேற்ற விரும்பினார். இவ்விரண்டையும் வேறுவேறாகக் காண நினைப்பது தவறு என்பதை இன்றைய தியானத்தின் வழியே ஆண்டவர் நமக்குக் காண்பிக்கிறார்.

உபதேசம் மட்டும் போதாது, உணவளிப்பதும் நமது கடமை. அந்தக் கடமையை மனிதர்களால் நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் தாமே நிறைவேற்றித் தருகிறார் இறைவன். திருமறையில் இந்தக் காட்சி பல முறை நமக்குக் காட்டப்படுகிறது. கடவுளின் ஜனமாகிய இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வனாந்தர வாழ்க்கையில் நுழைந்த போது இறைவன் அவர்களை மன்னாவினாலும், காடைக் கறியினாலும் போஷித்தார். தீர்க்கன் எலிஷாவின் வாழ்நாளில் 20 அப்பங்களைக் கொண்டு நூறு பேரைப் போஷித்து, அதிலும் மீதியானதைக் (2இராஜாக்கள் 4:42-42) காண்கிறோம். இதை அற்புதம் என்போமா? இல்லை ஆண்டவரின் கரிசனை என்போமா! இறைவனின் கரிசனைதான் நம் வாழ்வில் அற்புதங்களாக நாம் அனுபவித்து மகிழ உதவுகின்றன.

அன்று வனாந்தரத்தில் தம் ஜனமாகிய இஸ்ரவேலை அற்புதமாக விருந்தளித்துக் காத்த தெய்வம்; கலிலேயாவின் வனாந்தரத்தில் 5000 பேருக்கு விருந்தளித்த தெய்வம்; தாம் சிலுவையில் மரித்து தந்தையின் திருசித்தத்தை நிறைவேற்றும் முன்பு மேலறை விருந்தில் சீடருக்குத் தம் உடலையும், இரத்தத்தையும் உடன்படிக்கையின் உணவாகத் தந்த தெய்வம், இன்று நம்மோடு திருவிருந்தின் வழியாக அந்த உறவில் நிலைக்க நம்மையும் அழைத்திருக்கிறார்.

அன்பின் தகப்பனே, பசியாயிருப்பது நல்லதல்ல என அற்புதமாக உணவளித்துக் காத்தீர். என்னையும் காக்கச் சித்தமுள்ளவர் என்பதை மறவாமல் வாழ உமது தூய ஆவியால் என்னைப் பலப்படுத்தி வழிநடத்தும். இயேசுவின் பெயரால் வேண்டுகிறேன் பிதாவே ஆமேன்.