யாக்கோபு 1 : 19-22 22 ஜூலை 2022, வெள்ளி
“அவருடைய உக்கிர கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய சினத்தைச் சகிப்பவன் யார்?” – நாகூம் 1 : 6
இயற்கையின் சீற்றத்தால் உருவாகும் சுனாமி, புயல், பெருமழை, பூமியதிர்ச்சி இவற்றைத் தடுக்க முடியுமா? சகிக்க முடியுமா? இவற்றால் நாடே நிலைகுலைந்து போகின்றது. அதுபோல சில மனிதருடைய கோபத்தினால் வீடே அல்லோலகல்லோலப்படும்.
எல்லாவற்றையும் படைத்து தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கடவுள் கோபப்பட்டால் என்ன நடக்கும்? யார்தான் அவர் முன்பாக நிற்க முடியும்? கடவுள் அப்படி உக்கிரமாகக் கோபப்படக் காரணம் நினிவே நகரத்தின் பாவமாகும். அசீரியா நாட்டின் தலைநகரான இந்த நினிவே நகரத்தின் பாவமும் தீமையும் இறைச் சமூகத்தை எட்டின. இது இரண்டாவது முறை. ஏற்கனவே யோனா தீர்க்கர் மூலம் எச்சரிக்கப்பட்டு அழிவினின்று தப்பிய நினிவே மக்கள் மீண்டும் பாவம் செய்து இறைவனின் கோபத்திற்கு ஆளாகி நின்றனர். அதுவரை பொறுமை காத்த இறைவன் பொறுமையிழந்தார்.
நம் இறைவன் அன்புள்ளவர்; இரக்கமுள்ளவர்; நீடிய பொறுமையுள்ளவர். அவருடைய கோபம் நம்முடைய வாழ்வுக்காகவே. நாம் தீமைகளினின்று விடுபட்டு சமாதானமாய் வாழ வேண்டுமென்பதே அவர் விருப்பம். எருசலேம் ஆலயத்தை வியாபார வீடாக மாற்றியிருந்த யூதர்களை இயேசு கண்டித்தார். இயேசுவின் மீட்பின் திட்டத்துக்கு எதிராகப் பேசிய பேதுருவே அதட்டப் பட்டார்.
நமது பாவத்தின் விளைவு, தேவ கோபம், நமக்குத் தண்டனை. ஆனால் பரம தந்தை கிறிஸ்து இயேசுவை நமக்காகப் பாவமாக்கினார். சிலுவையில் தேவ கோபத்தை நிறைவேற்றி நம்மை விடுதலை செய்திருக்கின்றார். தேவக் கோபத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் நாம். எனவே கோபம் தவிர்த்து சாந்தத்தைத் தரித்துக் கொள்வோம். கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள். உங்கள் கோபம் சூரியன் மறையுமுன் மறைவதாக என்பன திருமறை வார்த்தைகள். இறைக்கோபம் நம்மைத் திருத்த வல்லது. கோபம் கொண்டாலும் இறைவன் என்றென்றும் கோபம் கொண்டிரார். இறைமக்களான நாம் நமது கோபப் பொறியினால் வீட்டைக் கொழுத்தாதிருப்போம்.
நியாயமான கோபம் கொள்ளும் கடவுளே! உம் மைந்தன் இயேசுவை எனக்காகத் தண்டித்தீர் என்பதை உணர்ந்து, பிறருடன் நல்லுறவுடன் வாழ்ந்திட அருள்புரிவீராக. இயேசுவின் வழியே ஆமேன்.