மத்தேயு 26 : 20-25                      29 மார்ச் 2021, திங்கள்

“ஆண்டவரே, நான்தானோ…” – மத்தேயு 26 : 22

நம் ஆண்டவர் இயேசு ஊழியத்தை 30 வது வயதில் ஆரம்பித்தார். ஊழியத்தை நேரில் பார்க்கவும் அவர் பாடு மரணத்திற்கு சாட்சியாய் இருக்கவும் சீடர்களைத் தெரிந்தெடுத்தார். சீடர்கள் பல நிலையிலும் துறையிலும் உள்ளவர்கள். மிகச் சாதாரண மக்கள். இவர்கள் இயேசுவோடு மூன்றறை ஆண்டுகள் இருந்தார்கள். இயேசு தம் மரண நேரம் நெருங்கி வருவதை அறிந்தார். தம் சீடர்களோடு யூதர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பஸ்கா பண்டிகையைக் கொண்டாட விரும்பினார். இயேசு சொன்னபடியே ஒரு வீட்டின் மேல் அறையில் சீடர்கள் பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள். மாலையில் இயேசுவும் சீடர்களும் பந்தியமர்ந்தார்கள். விருந்துண்டார்கள். இச்சமயம் இயேசு சீடர்களிடம் உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள் துக்கங்கொண்டார்கள்.  ஆண்டவரே, நான் தானோ என்று கேட்டார்கள். சீடர்கள் கேட்ட கேள்வியே நமது தியானப்பகுதி. யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதை ஆண்டவர் தெரிந்து கொண்டார். ரபீ நான் தானோ? என்று யூதாஸ் என்று கேட்டது துரோகத்திற்கு துணிபவர்கள் மாய்மாலத்துக்குத் தயங்க மாட்டார்கள் என்பதை உறுதிபடுத்துகிறது.

மனுக்குலத்தின் மீட்புக்கு தன்னுடைய மரணம் இன்றியமையாதது என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். இருப்பினும் அவரைக் காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டு நட்புக்குத் துரோகம் செய்யத் துணிந்தவனுக்கு மீட்பே கிடையாது என்கிறார் நம் ஆண்டவர். ஆண்டவரின் மன்னிக்கும் அன்புக்கு எவரும் தூரமானவர்கள் அல்லர். ஆனால் ஒருசில பாவங்களால் நாமும் அதற்குத் தூரமாய்ப்போக முடியும் என்பதை ஆண்டவரின் வார்த்தைகள் உணர்த்துகின்றன. யூதாஸ் ஆண்டவரின் அன்பை உணராமல் இருந்ததால் கேடு வந்தது. இயேசு கொடுத்த மன்னிப்பையெல்லாம் அறிந்திருந்தும் யூதாஸ் தவறு செய்தான்.

இந்த தவக் காலத்தில் இயேசுவின் கொடூரமான வேதனைகளை ஆழ்ந்து சிந்திக்கிறோம். அத்தோடு விட்டுவிடுகிறோம். இது போதுமா? தவக்கால சிந்தனைக்கு நோக்கமே சிலுவைப்பாடுகளுக்கு நாமே காரணம் எனப்தை உணருவதாகும். என் பண ஆசையும் பாவ செயல்களும்தான் இயேசுவை எதிரிகளின் கைகளில் ஒப்புக் கொடுத்தன. என் போலி பக்திதான் இயேசுவை காட்டிக் கொடுக்க காரணமாயிருந்தது. என் பெருமைதான் அவர் தலையில் முள்முடியானது. என் அக்கிரமம் தான் சபிக்கப்பட்ட சிலுவையின் ஆணியானது.

நம் பாவங்களை உணருவோம். அதன் கொடூரத்தை அறிவோம். இதிலிருந்து விடுபட இயேசுவின் சிலுவை அடிவாரம் வருவோம். மன்னிப்பைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழுவோம்.

அன்பின் கடவுளே! எங்கள் பாவத்திற்காக உம் குமாரனை சிலுவையில் பலியிட்டீர். அவரிடம் வந்து பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.