சங்கீதம் 33 : 10-15 29 ஜூலை 2022, வெள்ளி
“நீ செய்த ஆலோசனையினால் உன் வீட்டுக்கு அவமானம் வரும்.” – ஆபகூக் 2 : 10
சில நண்பர்கள் கூடி எளிதான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என ஆலோசித்தனர். நேர்வழியில் சம்பாதிப்பதைவிட குறுக்கு வழியில் சம்பாதித்தால் சீக்கிரம் செல்வந்தர்களாகி விடலாம் என்று எண்ணி அதற்கான செயல்களில் இறங்கினர். திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டனர். முதலில் தப்பி வந்த அவர்கள் கடைசியில் காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்டனர். விளைவு இப்போது அவர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்களுடைய பெற்றோர் ஊரில் தலைகாட்ட முடியவில்லை.
நல் ஆலோசனையினால் மனிதனுக்குப் புகழ்ச்சி வரலாம். ஆனால் தீய ஆலோசனைகளால் அவமானம் ஏற்படுகின்றன. பாபிலோன் தேசத்தாரின் தீய ஆலோசனைகளால் விளைந்த செயல்கள் அவர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தும் என்பது தீர்க்கரின் கணிப்பு.
மதுபானம், கொள்ளை, ரத்தம் சிந்துதல், கொடுமை போன்ற செயல்களைச் செய்த பாபிலோனுக்கு அவமானமே ஏற்படும்; புகழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை. தீய ஆலோசனையினால் பாபிலோன் நாடு, யூதா நாட்டிற்குச் செய்த கொடுமைகள் ஏராளம். இதனால் பாபிலோன் நாட்டிற்கே அவமானம் ஏற்படும் என்று ஆபகூக் தீர்க்கத்தரிசனம் உரைத்தார். நம்முடைய ஆலோசனைகளும் செயல்களும் நம் வீட்டிற்கு, நாட்டிற்கு, எல்லா வற்றுக்கும் மேலாக இறைவனுக்குப் புகழ்ச்சியைத் தருகின்றனவா? அல்லது அவமானத்தை ஏற்படுத்துகின்றனவா? வீடு அவமானப் படுவதை விரும்பாத நாம், தீய ஆலோசனைகளை கேட்டு வீட்டை அவமானப் படுத்தாதிருப்போம். நல் ஆலோசனைகளைப் பெற நாம் இயேசுவிடம் வருவோம். ஏசாயா இவருடைய பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கும் போது, அவரை ‘ஆலோசனைக் கர்த்தர்’ எனக் குறிப்பிடுகின்றார்.
கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும் அவர் இருதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைக்கும், நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு போதித்து உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வசனங்கள் இறை ஆலோசனையின் நன்மையை, வல்லமையை நமக்கு விளக்குகிறது. நமது வாழ்க்கையைக் கடவுளின் வசன வெளிச்சத்தில் நடத்துவோம். இறை ஆலோசனைகளைக் கேட்போம். வீட்டிற்கும் இறைவனுக்கும் பெருமை சேர்க்கும் நற்செயல்கள் செய்து கடவுளுக்கு மகிமையாக வாழ்வோம்.
ஆலோசனைக் கர்த்தரே! தமது நல் ஆலோசனை களை நாடி அதன்படி வாழ்ந்திட திருவருள் புரிந்தருள்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.