நீதிமொழிகள் 15 : 20-24                                                 10 ஜனவரி 2022, திங்கள்

“முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ராஜா தள்ளிவிட்டு….”– 1 இராஜாக்கள் 12 : 13

மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும் முன்பு கசக்கும்; பின்பு இனிக்கும் என்பது முற்றிலும் உண்மையான கருத்து!

சாலொமோன் மன்னனின் மைந்தன் பெயர் ரெகோபேயாம். மக்கள் தங்கள் பிரச்சினையை முன் வைத்தனர். தந்தையின் அரசைத் தப்ப வைத்திட முடியுமா? முடியாதா? இதுதான் பிரச்சினை.

இளையோரின் ஆலோசனையைக் கேட்டறிந்தார். முதியோரின் ஆலோசனைகளையும் அறிந்தார். முதியோரின் அனுபவ ஆலோசனையை விலக்கிப் போட்டார். இளைஞர்களின் ஆலோசனை அவருக்கு ஏற்புடையதாயிருந்தது. விளைவு என்ன? அவர் தந்தை சாலொமோன் விட்டுப் போன அரசு இரண்டாக உடைந்தது. பன்னிரெண்டு கோத்திரங்களில் இரு கோத்திரங்களுக்கு மட்டுமே மன்னனாகும் வாய்ப்பு ரெகோபேயாமுக்கு கிட்டியது.

இன்று நமது நல்வாழ்வுக்கு நல்லாலோசனை தந்திட என் கர்த்தர் இயேசு இருக்கின்றார். குடும்பத்தின் பெரியவர்கள் வழியாகவும் உறவுகள் வழியாகவும் ஆண்டவர் தமது விருப்பங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

கானாவூர் கலியாண வீட்டில் திராட்ச இரசம் காலியானது. அப்போது பணியாட்களிடம், “அவர் (இயேசு) உங்களுக்கு ஏதேது சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யுங்கள்” என்றார் மரியாள்.

இயேசுவின் ஆலோசனைப் படி பணியாட்கள் செய்தனர். விளைவு என்ன? புதிய ரசம்!@ புதிய சுவை! முழு நிறைவு திருமண விருந்தில்!

இன்று நமக்கும் நல்லாலோசனைகள் தந்திட நமது கர்த்தர் பலரைத் தந்துள்ளார்.

பெற்றோர், வயதில் பெரியோர், போதகர், ஆசிரியர்கள் போன்று பலரை நம் கடவுள் நமக்குத் தந்துள்ளார். அவர்கள் வழியாக இறைவன் தந்திடும் நல்லாலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவோம். இப்படி, நமக்கு ஆலோசனைகளை வழங்கிடும் கர்த்தரை நன்றியோடு துதிப்போம்.

ஆலோசனைக் கர்த்தரே! நல்லாலோசனை நல்கி அடியேனை நல்வழியில் நடத்துவீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.