யாத்திராகமம் 3 : 7-14                                22 ஜனவரி 2022, சனி

“…..பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” – 2 இராஜாக்கள் 6 : 16

வாழ்க்கையில் நெருக்கடியா? பிரச்சினைகளினால் சூழப்பட்டிருக்கின்றீர்களா? பிசாசின் செயல்பாடுகளால் பாதிக்கப் பட்டிருப்பதாய் நம்புகின்றீர்களா? இன்றைய தியானம் அதைப் பற்றித்தான் பேசுகிறது.

சீரியா அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் படையெடுத்தான். அவனது நடமாட்டத்தை இஸ்ரவேல் அரசருக்கு எலீஷா தீர்க்கதரிசி அவ்வப்போது அறிவித்து வந்தார். இதனை அறிந்த சீரியப்படை, எலீஷாவைச் சூழ்ந்துகொண்டது. இதனைக் கண்ட தீர்க்கரின் பணியாள் பயமுற்றான்; பதற்றமடைந்தான். அப்போது எலீஷா சொன்னதுதான் இன்றைய தியானத் திருவசனம்.

நானும் பயந்து வாழ்கின்றேன். என் வாழ்வின் பல நிகழ்வுகளில் பதற்றமடைகின்றேன். சோர்ந்து போகின்றேன். என்றாலும் என் இரட்சகர் இயேசு என்னோடிருக்கின்றார். “இதோ யுக முடிவு பரியந்தம் சகல நாட்களிலும நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத்தேயு 28 : 20) என்றவர் அல்லவா, என் இரட்சகர்! என் இரட்சகர் இயேசுவுடன் இருந்த பன்னிரெண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்கள் என்னுடன் உள்ளனரே! ஒரு லேகியோன் என்றாலே 6000 பேரைக் குறிக்குமே. அப்படியானால் நான் எத்தனைப் பெரிய பேறு பெற்றவன்!

நான் இயேசுவின் பிள்ளை. என் இரட்சகர் இயேசு என்னுடன் இருக்கும் போது மனித சக்தியைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும்? பிசாசின் ஆற்றலைக் கண்டு நான் ஏன் பதற்றமடைய வேண்டும்? சக்தி வாய்ந்த இராட்சசன் கோலியாத்தை வீழ்த்திட, கர்த்தர் சிறுவன் தாவீதைத்தானே பயன்படுத்தினார். போர்க் கவசங்களினால் தன்னை போர்த்திக் கொண்டிருந்த கோலியாத்தை ஒரு கூழாங்கல்லினால் யோவான் வீழ்த்தவில்லையா?

இஸ்ரவேல் மக்களின் உபத்திரவத்தைப் பார்த்தவர்; அவர்கள் இட்ட கூக்குரலைக் கேட்டவர்; அவர்கள் பட்ட வேதனைகளை அறிந்தவர் கர்த்தர். இவற்றைப் பார்த்த கர்த்தர் சும்மா கைகட்டிக் கொண்டா இருந்தார்? வேடிக்கைப் பார்த்துக் கொண்டா இருந்தார். இல்லை!

இஸ்ரவேலரை அடக்கி ஒடுக்கி வந்த எகிப்திய சாம்ராஜ்யத்தை எதிர்த்திட, ஒரு திக்குவாயன் மோசேயை தேவன் தெரிந்தெடுக்கவில்லையா? இன்று எனக்கு என் இரட்சகர் இயேசுவின் சிலுவை ஆயுதம் உள்ளது. இது தேவ வல்லமை. இந்த வல்லமையினால் உலகை வெல்லுவேன். வாழ்வியல் பிரச்சனைகளை வெல்லுவேன். இரட்சகர் இயேசுவின் இரத்தம் ஜெயம். அல்லேலூயா!

பாதுகாவலரே! தமது பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட நின்னருள் புரிந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.