மாற்கு 16 : 12-14 20 ஏப்ரல் 2022, புதன்
“அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு போகிறபொழுது… தரிசனமானார்.” – மாற்கு 16 : 12
இயேசு கல்வாரி சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்தார். மரித்தவரை அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்ட இயேசு வாரத்தின் முதல் நாள் ஞாயிறு காலை உயிருடன் எழுந்தார். உயிர்த்த நம் ஆண்டவர் பெண்களுக்கு முதலில் தரிசனமானார். தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார்.
இயேசு, அன்று மாலை எம்மாவூர் என்ற ஊருக்குப் போனார். இந்த ஊர் எருசலேமிலிருந்து எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். இரண்டு சீடர்கள் இந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். இயேசுவின் பாடுமரணத்தைக் குறித்து அவர்கள் பேசியதை இயேசு கேட்டார். அவர்களோடு உரையாடினார்.
மரித்து அடக்கம் செய்வதை நேரில் பார்த்தவர்கள் தங்களோடு நடந்து, பேசுபவர் இயேசுதான் என்பதை எப்படி நம்புவார்கள். எனவே இவ்விரு சீடர்களும் தங்களோடு பேசுபவர் இயேசு என்பதை அறிந்து கொள்ளவில்லை.
இயேசுவின் பாடு மரணத்தைக் குறித்து தாங்கள் பேசிக்கொண்டு வருவதை தங்களோடு நடந்து வருபவர் அறியாமல் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவின் கேள்வி இருவரையும் பேச வைத்தது. இயேசு மோசே முதல் உள்ள தீர்க்க தரிசனங்களை விளக்கிக் கூறினார். மேசியாவான இயேசு பாடுபட்டு மரிக்க வேண்டும். அவர் உயிர்த்தெழ வேண்டும் என்பதை திருமறை வசனங்கள் வழியாக தெளிவாக விளக்கினார். இருவரும் இயேசுவின் திருமறை தெளிவுரையைக் கேட்டப்போது, உள்ளத்திலே சிறு அசைவு ஏற்பட்டது. ஆனாலும் மரித்தவர் எப்படி உயிர்த்தெழுவார் என்கிற செய்தி தங்கள் அறிவுக்கு எட்டாததாக இருந்தது. எனவே, நம்பிக்கை பிறக்கவில்லை.
எம்மாவு கிராமத்தை சேர்ந்தபோது இயேசு இவர்களை பிரிந்து செல்வதாகக் காட்டினார். இருவரும், ‘அந்தகாரமாயிற்று. எங்களோடு இரவு தங்கிவிட்டு காலையில் செல்லலாம்’ என்று வருந்தி கேட்டுக் கொண்டார்கள். இதற்கு இயேசு உடன்பட்டார்.
இயேசு அவர்களோடு தங்கினார். இரவு உணவு பரிமாறப்பட்டது. இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை யோசித்துப் பார்த்தார்கள். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட நாளில் நடந்தது நினைவுக்கு வந்தது.
இதை மனதில் நிறுத்தி உற்று பார்த்தார்கள். அது இயேசு என்று கண்டார்கள். இயேசு மறைந்து போனார். நேரம் கடந்து அந்தகாரமாயிற்று என்று சொன்ன இருவரும் தைரியத்தோடு எருசலேமுக்கு வந்து மற்ற சீடர்களிடம் நடந்ததை கூறி இயேசுவைக் கண்டோம். அவரோடு பேசினோம் என்றார்கள்.
உயிர்த்த இயேசுவை வாழ்வின் நிகழ்வுகளில் காணலாம். திருமறை எழுத்துக்களை நம்புவோம், நித்திய வாழ்வைப் பெறுவோம்.
கடவுளே! உமது வார்த்தைகள் வழியாக உயிர்த்த ஆண்டவரோடு பயணிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.