ஏசாயா 57 : 15-19 05 பிப்ரவரி 2022, சனி
“நான் தவிப்பதைப் பலர் கேட்கிறார்கள்; என்னத் தேற்றுவதற்கோ ஒருவருமில்லை;…” – புலம்பல் 1 : 21
நண்பர்களுடன் சேர்ந்து குற்றம் புரிந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டான். இவன் தன் நண்பர்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. இவர்களும் நல்லவர்களைப் போல் நடந்து கொண்டார்கள். இவனது நண்பர்கள் இவனைச் சந்திக்கவோ தேற்றவோ வரவில்லை. வேதனையுடனும் ஏமாற்றத்துடனும் இளைஞன் தண்டனை நாட்களைச் செலவிட்டான்.
இஸ்ரவேல் மக்கள் தனிமையில் நியாயத் தீர்ப்பை அனுபவித்த போது யாருக்கும் இரக்கம் பிறக்கவில்லை. எவரும் கவலைப்படவும் இல்லை. யாரும் ஆறுதல் சொல்ல முன் வரவில்லை. அவர்கள் கொண்டாடிய விக்கிரகங்களோ, விக்கிரக தேசங்களோ, படைபலமுள்ள நட்பு நாடுகளோ அதன் சாய்ந்த மதில்களைத் தாங்கி நிறுத்த முடியவில்லை.
மனித வாழ்வும் இத்தகையதுதான். நாம் சுகபோகமாக வாழும் காலத்தில் பாவத்தினால் விளைந்த சந்தோஷங்களைப் பங்கு வைக்க நீயா… நானா என்று போட்டியிடுவர். பாவத்தின் விளைவுகளை, நியாயத் தீர்ப்பை அனுபவிக்கும் நாளில் நமக்குத் தோள் தர எவரும் முன்வருவதில்லை.
இயேசு பாவமற்றவராயிருந்தும் நம்முடைய பாவத்திற்காகத் தனிமையில் சிலுவையில் தொங்கினார். சாலையோரம் சென்ற மக்கள் அவரை ஏளனமாய்த் தலையசைத்துக் கேலி செய்தனர். இயேசுவோ தனியொருவராக மனிதரின் துயர் துடைக்க, மரித்து உலகுக்கு இரட்சிப்பை ஏற்படுத்தினார். ஆகவே நம்முடைய கஷ்டங்கள், கண்ணீரைத் துடைத்து நம்மை ஆற்றித் தேற்ற ஒருவர் இருக்கிறார் என்பதை உணருவோம். ஏசாயா எனும் தீர்க்கர் ஒரு தாய் தேற்றுவது போல இறைவன் உன்னைத் தேற்றுவார் என்று சொன்னார். அவர் வாக்குமாறாதவர் என்றும் கூறுகிறார்.
உள்ளத்தில் வேதனைகள், உடலின் நோய்கள், மற்றவர்களால் ஏற்படும் நிந்தைகள், உங்களுக்கு எதிராக சொல்லப்படும் பழிகள் வீண் சந்தேகங்கள் உங்களைப் புண்படுத்துகிறதா? இனி கவலை வேண்டாம். ஆண்டவர் இயேசு நமது ஆத்துமாவைத் தேற்றி முதிர்வயது மட்டும் நம்மை ஆதரிக்கிறவருமாய் இருக்கிறார். ஆறுதல் தேடி அலைந்தது போதும். வாருங்கள். அவரிடம் வந்தால், கடந்த காலத்தின் கஷ்டங்கள், தோல்விகள் இன்றைய தினத்தின் பசுமைக்கும் நாளைய தினத்தின் உயர்விற்கும் அஸ்திபாரமாகிவிடும். கர்த்தர் எனக்குத் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து கொள்வார்கள் என்ற சங்கீதக்காரனின் வாக்கு உண்மையாகி விடும் நமது வாழ்க்கையில்.
தேற்றுவாரின்றி அழுது புலம்புகிறாயோ?
தேற்றி ஆற்ற தேற்றரவாளன் வருவார்!
எங்களை ஆற்றித்தேற்றும் நாயகரே! சுகபோகங்களுக்காக எங்களை விற்றுப்போட்டு வாழ்வின் ஆசீர்வாதங்களை இழக்காதபடி துன்பத்தில் தேற்றுகின்ற ஆண்டவர் எங்களுடன் இருக்கிறார் என்ற நிச்சயத்துடன் வாழ அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.