யோவான் 15 : 1-8 07 மே 2022, சனி
“ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், கொடியைப் போல வெளியே எறியுண்டு உலர்ந்து போவான்;” – யோவான் 15 : 6(a)
தேர்வு செய்வதில் நம் எல்லாருக்கும் அனுபவம் உண்டு. நாட்டை ஆளுகை செய்கிறவர்களை தெரிந்தெடுப்பதில் நமது வாக்குகளைத் தேர்தல் நேரத்தில் பதிவிடுகிறோம். தடகள அணிகள் தங்களின் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அன்றாட வாழ்விலும் நாம் பல காரியங்களைத் தெரிந்தெடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.
என்ன உடை உடுத்திக்கொள்வது, எந்த கடையில் பொருட்கள் வாங்க வேண்டும், எந்த உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று எல்லாவற்றையுமே தெரிந்தெடுத்துத் தான் செய்கிறோம் அல்லவா. இவைகள் எல்லாம் தெரிந்தெடுப்பது அதன் மதிப்புகளையும், தரத்தையும், பார்த்துதான். இவ்வித தெரிந்தெடுப்பு மனித பார்வை.
ஆனால் கடவுளின் பார்வையோ வேறு. கடவுள் நம்மை கிறிஸ்துவில் தெரிந்து கொள்வது, எந்த மதிப்பைப் பார்த்து ? ஒன்றும் இல்லை. தகுதி அற்ற நம் மேல் கடவுள் காட்டும் பரிவே கிருபை ஆகும். கடவுளின் அன்பை நாம் பெற்றுக்கொள்ள ஒரு தகுதியும் இல்லாதவர்கள். ஆனால் கடவுள் தமது கிருபையினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். தமது அன்பினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். பவுல் அடிகளார் “நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்தார் என்று, எபேசியர்1:4 ல் குறிப்பிடுகிறார். நாம் பிறப்பதற்கு முன் கடவுள் நம்மை தமது பரிசுத்த ஜனமாகத் தெரிந்துகொண்டார். கிறிஸ்து தமது இரத்தத்தினால் நமது பாவங்களை மன்னிக்கிறார். நாம் பெற்றுக்கொள்ளுகின்ற வார்த்தையோடுகூடிய திருமுழுக்கினால் நம்மை கழுவி தமக்கு சொந்தமாகத் தெரிந்துக்கொண்டார். கடவுள் தமது நீதியினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். நமது ஆண்டவர் யோவான் நற்செய்தியில், “நீங்கள் என்னை தெரிந்துக்கொள்வில்லை நான் உங்களைத் தெரிந்துக்கொண்டேன்,” என்று குறிப்பிடுகிறார். (யோவான் 15:6a)
அன்புக்குரியவர்களே தெரிந்தெடுக்கப்பட்ட, அன்பை கிறிஸ்துவில் பெற்றுக்கொண்ட நாம் அன்பின் கனிக்கொடுப்போம். கிறிஸ்துவின் அன்பை உலகிற்குக் காண்பிப்போம். தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் அடையாளம் இதுவே.
அன்பின் கடவுளே தகுதியற்ற எங்களை உம்முடைய சொந்த குமாரன் இயேசுவில் தெரிந்துக் கொண்டதற்காக நன்றிச் செலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.