சங்கீதம் 65 : 2-4 06 ஜுன் 2022, திங்கள்
“உமது பரிசுத்த ஆலயமாகிய வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.” – சங்கீதம் 65 : 4(b)
தவறு செய்தல் இயல்பான ஒன்று. தவறுகள் எங்கேயிருந்தாலும் அதை ஆராயும் மனோபாவம் நமக்குண்டு. நாம் தவறு செய்திருந்தாலும் அதை அறியும் போது வெட்கப்படுகிறோம். நமது குற்றம் பெரிதென்றும் மன்னிக்கப்பட முடியாதென்றும் உணருகிறோம். பாவ சுமையையும் குற்ற பாரத்தையும் விட முயற்சிக்கிறோம். குறைந்தது அதை மறைக்க பிரயாசை படுகிறோம்.
இதற்காக சில சமயங்களில் மதுவையும் போதை பொருட்களையும் நாடுகிறோம். இது பாவத்தின் மேல் பாவத்தை கூட்டுகிறது. ஒரு முறை பயன்படுத்திய பின் மேலும் அதை நாடத் தூண்டும். அதை ஊக்குவிப்பதற்கே சில தவறான வழிகாட்டிகள் நமக்கு வந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் “சமாதானம் சமாதானம் என்பர் ஆனால் சமாதானம் இருப்பதில்லை.” (எரேமியா 6:14)
உண்மையான சமாதானம் பாவ மன்னிப்பில் தான் உள்ளது. உண்மையான உதவி என்பது, பாவம் நம்மை ஆட்கொள்ளும் போது நமது ஜெபத்தை கேட்கும் ஒருவராலே ஆகும். நமது மீறுதல்களுக்கான பரிகாரம் செய்தவர் கிறிஸ்து.
பாவத்திற்கு இன்னொரு பெயர் ‘மீறுதல்’ ஆகும். எல்லை மீறுதல் என்பது வரையறுக்கப்பட்ட கோட்டை தாண்டுவது ஆகும். மானிடர்க்காக தாம் வழங்கிய பத்துக் கற்பனைகளை கொண்டு கடவுள் மனிதரின் மனதில் ஒரு கோடு வரைந்துள்ளார். ஆனால் நாம் அதை தாண்டுகிறோம். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் அவர்களிடமிருந்து பெற்ற முரட்டாட்டத்தால் இதை செய்கிறோம்.
எதை செய்யக் கூடாதோ அதை செய்கிறோம். கடவுள் கட்டளையிட்ட நன்மையானதை செய்ய தவறுகிறோம். கடவுளின் சந்நிதியை விட்டு ஓடிப்போன ஆதாம் ஏவாளைப் போல நாமும் கடவுளை விட்டு தூர விலகுகிறோhம். உங்கள் அக்கிரமங்களே, கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே பிரிவினை உண்டாக்குகிறது.(ஏசாயா 59:2)
நமது மீறுதல்களுக்கான பரிகாரமாக வந்தவர் இயேசு. கடவுளோடு ஒப்புரவாகவும், கடவுளோடு ஒன்றுபட்டு நிற்கவும் செய்ய அவர் வந்தார். நமது இரட்சகர் ஒருபோதும் மீறுதல்களை செய்தவரல்ல. கடவுளின் கற்பனைகளின் எல்லைகளை தாண்டியதில்லை. தீமையறியாத கடவுளின் குமாரன் நமது மீறுதல்களின் பாரத்தை சுமந்தார். அவைகளை சிலுவையில் சுமந்தார். மரண தீர்ப்பை நமக்காக ஏற்றார். கிறிஸ்துவின் வழியாக கடவுள் நம்மோடு ஒப்புரவானார். அவருடைய இரத்தத்தினால் நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணினார் (கொலோ 1:20)
தெரிந்தெடுக்கப்பட்டு அருகே கொண்டு வரப்பட்டவர் பாக்கியவான். நற்செய்தி வழியாக பரிசுத்த ஆவியானவரால் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நற்செய்தி கடவுள் நமக்காக செய்தவையாகும். பாவபாரம் அவரால் நீக்கப்படுகிறது. நாம் பாவத்தை சிலுவையின் அருகே விட்டுவிட்டு மனந்திரும்பியிருக்கிறோம். நமது குற்றங்கள் என்றென்றும் விழுங்கப்பட்டதால் வெறுமையான கல்லறை போல் நாம் திருப்தியடைகிறோம்.
ஆண்டவராகிய கடவுளே, நீர் எங்கள் விண்ணப்பங்களை கேட்டு எங்கள் பாவங்களை மன்னித்திருக்கிறீர். உமது செயல்களால் எங்களை திருப்தியாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.