மாற்கு 8 : 31-33 25 ஆகஸ்ட் 2022, வியாழன்
“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; …..உமக்கு ….மோசேக்கு…..எலியாவுக்கு…. மூன்று கூடாரங்களைப் போடுவேன்.” – மத்தேயு 17 : 4
தீரு, சீதோன் எல்லைகளுக்குச் சென்றார் ஆண்டவர் இயேசு. பின்பு தம் சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவானுடன் தாபோர் மலைக்குச் சென்றார். அங்கு மறுரூபமானார். அப்போது பேதுரு கூறிய வார்த்தைகள்தான் தியானப்பகுதி.
இயேசுவின் மறுரூபமாகுதல் அவரை கடவுள் என அறிவித்தது. வானத்திலிருந்து வந்த சப்தம் இயேசுவை தேவகுமாரன் என சாட்சியிட்டது.
இச்சம்பவத்திற்கு முன் ஆண்டவர் இயேசு தம் சிலுவை மரணத்தை திட்டமாய் சீடரிடம் கூறியிருந்தார். சீடர் பேதுருவோ இங்கே தங்கியிருப்பது நல்லது என்றார். ஏனெனில் மோசேயும் எலியாவும் இயேசுவுடன் பேசினதைக் கண்ட போது பரலோகத்தில் தாம் இருப்பதாகவே எண்ணினார். இயேசுவுக்குப் பாடுகள் தேவையில்லை என்பது அவர் எண்ணம். அதனால் அங்கே தங்கியிருப்பது நல்லது என்றார்.
எலியாவும், மோசேயும் பழைய ஏற்பாட்டுப் பிரதிநிதிகள். எலியா கடவுளிடம் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்க்கர், மோசே கடவுளால் அடக்கம் செய்யப்பட்டவர். இவர்களை பேதுருவுக்கு இயேசுவே அடையாளம் காட்டியிருக்கலாம். இந்த இருவரும் எருசலேமில் இயேசு எதிர்கொள்ளப்போகும் சிலுவை மரணத்தைப் பற்றி பேசினார்கள். பயமிகுதியால் பேதுரு மனம் பதறி கூறினார்.
நற்செய்தியாளர் மாற்கு தனது நற்செய்தி நூலில் பேதுருவின் பேச்சினை மதியீனம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கூடாரங்களை அமைப்பது இயேசுவுக்கு மகிழ்ச்சி என தவறாக நினைத்தார் என்றும் கூறியுள்ளார்.
இயேசு, பேதுருவின் பேச்சுக்குப் பதில் கொடுக்கவில்லை. இயேசுவின் அமைதி பேதுருவை மறைமுகமாகக் கண்டித்தது.
இயேசு, எலியா, மோசே போன்றவர்கள் ஒரே அந்தஸ்தைப் பெற்றவர்கள் அல்லர். இயேசு மட்டுமே இரட்சகர். அந்த உண்மையும் பேதுருவுக்குப் புரியவில்லை.
‘சிலுவையில்லாமல் மேன்மை இல்லை’ என்பது புரியாமல் தூய பேதுரு தவித்தார். மறுரூபமான இயேசு எதிர்நோக்கப் போகும் பாடுகளைப் பேதுரு புரிந்து கொள்ளவில்லை.
இயேசுவின் மறுரூப காட்சியைக் கண்ட இயேசுவின் சீடர்கள், கிறிஸ்துவின் மகிமை சிலுவையில்தான் உள்ளது என்பதை பிற்காலத்தில் உணர்ந்தனர். மகிமையுள்ள கிறிஸ்துவுக்கு இம்மண்ணிலேயே சாட்சியாக வாழ்ந்தனர். நாமும் கிறிஸ்துவின் மகிமைக்குச் சாட்சியாக வாழ்வோம்.
கடவுளே! உமது மகிமையைத் தரிசித்து, உமது பிரசன்னத்தின் உதவியினால் சாட்சியுடன் வாழ்ந்திட அருள்செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.