லூக்கா 1 : 31-34 13 டிசம்பர் 2022, செவ்வாய்
“கடவுளிடத்தில் கிருபை பெற்றாய்.” – லூக்கா 1 : 31
தேவ தூதன் மரியாளிடம் சொன்னதும், அதை மரியாள் எவ்வாறு புரிந்து கொண்டார் என்பதிலும் உள்ள முரண்பாடு வேடிக்கையாகத் தான் உள்ளது. இயேசு எவ்வளவு பெரியவராயிருப்பார், அவர் எப்படி நீடித்த காலம் அரசாளுவார், உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார் என்று ஒவ்வொன்றாக வரிசையாக தேவதூதன் கூறினான். மரியாள் அவையனைத்தையும் தெளிவாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். அது எந்த அளவு என்று பார்ப்போமானால், பல ஆண்டுகள் கழிந்த பிறகு இயேசு இவ்வுலகை விட்டு பரலோகம் ஏறிச் சென்ற பிறகும் இயேசுவின் வரலாற்றைத் தொகுத்து எழுதிய லூக்காவிற்கு தெளிவாகக் கூறுமளவிற்கு அவற்றைக் கவனமாகக் கேட்டு மனதில் இருத்தியுள்ளது தெரிகிறது. ஆனால் அந்த நொடியில் ஒரு கேள்வி மட்டுமே கேட்கும் நிலையிலிருந்தாள் இது `எப்படியாகும்’ என்று?
மரியாளுக்குத் தெரியும் தான் ஒரு கன்னிப்பெண் என்பது. கன்னிப் பெண்களுக்கு குழந்தை இருப்பது முடியாதது எனவே தான் தேவதூதனின் முதல் வரிகளை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. `நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.’ புரியாத புதிர் அல்லவா இது. எனவே தான் தேவதூனிடமே கேட்கிறாள். இது எப்படி ஆகும் என்று.
மரியாள் கேட்பது அவளைப் பொறுத்தவரை சரிதான். ஒரு அடிப்படையான காரியத்தைக் குறித்து கேள்வி எழுப்புவதால், தன்னை புத்தியில்லாதவள் என்று பிறர் எண்ணுவார்களே என்று அவள் கவலைப்படவேயில்லை. அதுபோன்று, தன்னுடைய கவலைகளை அப்போதைக்கு மறைத்து வைத்து விட்டு, பின்னால் அதை எண்ணி எண்ணி கவலைப்படவும் விரும்பவில்லை. அவள் கேட்டாள். கடவுள் பதிலளித்தார்.
நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய காரியங்கள் நமது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. கடவுளும் புதிய காரியங்களை அனுப்பத்தான் செய்கிறார். ஆனால் அதை எவ்வாறு கையாள்வது என்பது தான் நமக்குத் தெரியவில்லை. நாமும் ஏன் மரியாளை இக்காரியத்தில் பின்பற்றக் கூடாது. கடவுளிடம் கேட்கலாமே. நாமும் அவ்வாறு செய்வதைத் தான் திருமறையும் நமக்குச் சொல்லுகிறது. `உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாயிருந்தால் அவன் கடவுளிடம் கேட்கக்கடவன். அது அவனுக்குக் கொடுக்கப்படும்.
அவர் கடிந்து கொள்ளாமல் எல்லாருக்கும் உதாரத்துவமாய் கொடுக்கிறவர்.’ குழந்தைகளைப் போல் அவரிடம் உதவி கேட்டு செல்வோருக்கு அவர் இரக்கமும், மென்மையுமானவராயிருக்கிறார். என்ன இருந்தாலும் நம்மை மீட்கும் இரட்சகராகத் தமது நேசக்குமாரனை நமக்காக இவ்வுலகில் அனுப்பித் தந்தவராயிற்றே. மரியாளிடம் அக்கறையுடன், மரியாதையுடன் அவளை நடத்திய அதே கடவுள், இன்று நம்மையும் நிச்சயமாக அன்புடனும், கிருபையுடனும், நடத்துவார் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். அவரிடமே கேளுங்கள். பெற்றுக் கொள்ளுங்கள். தெளிவடையுங்கள்.
அன்பின் பரம பிதாவே, உமது காரியங்களை என்னால் விளங்கிக் கொள்ள முடியாமல் போகும் போது, எனக்கு உதவி செய்து வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.