1 யோவான் 5 : 10-13 10 நவம்பர் 2023, வெள்ளி
“என்னை அனுப்பினவரை நம்புகிறவன் நித்திய ஜீவனை உடையவன்.” – யோவான் 5 : 24
மனிதன் வாழ்வில் தடுமாறிக்கொண்டே இருக்கின்றான். அவனது மகிழ்ச்சி, நிம்மதி கெட்டிருக்கின்றது. சமாதானம், அன்பு அழிகிறது. உறவுகள் சிதைகிறது. இதன் மத்தியில் அழியாத வாழ்வு என்னும் நம்பிக்கை மனித உள்ளத்தில் மறைந்து போகிறது. அழிந்து போகும் உடலைத் தாலாட்டுவதிலும் வளர்ப்பதிலும் மனிதன் சிரமம் எடுத்துக் கொள்கிறான். இவ்வுலக வாழ்வுக்காக வசதிகளைச் சேர்த்துக் கொள்ள அலைகிறான். இதற்கு மகிழ்ச்சியான வாழ்வு என்றும் பெயரிடுகின்றான்.
நாம் வாழ்ந்திருக்கும் காலத்தில் கடவுளையும் அவர் அருளும் ஆசீர்வாதங்களையும் நினைக்கத் தவறி விடுகின்றோம். இந்த இறை நம்பிக்கையின்மை நமது வாழ்வைப் போலியானதாக்குகிறது. இறை நம்பிக்கை இல்லாதவன் ஆத்மாவை இழந்து போகிறவன். இதனால் நித்திய ஜீவன் என்கிற வாழ்வையும் பெறத் தவறிவிடுகிறான். இயேசு ‘கடவுளில் நம்பிக்கை வையுங்கள். அவரே என்னை அனுப்பினார்’ என்று கூறுகிறார். கடவுளை நம்புதல் என்பது அவர் அனுப்பிய அவருடைய ஒரே குமாரானாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதே ஆகும். இயேசுவை அன்று ஆயிரக்கணக்கானோர் நம்பினர். இன்று கோடிக்கணக்கானோர் நம்புகின்றனர். இன்னும் பல கோடிப் பேருக்கு அவர் யார் என்று இன்று வரை தெரியவில்லை. அக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்த பாமர மக்கள், மற்றும் ஆயக்காரர்களும் பாவிகளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ்ந்தனர். அவரது வார்த்தைகள் இன்றும் நமக்கு வழி காட்டுகின்றன.
இன்று கடவுளின் வார்த்தைகளைக் கொண்டு வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் கடவுளைவிட ஊழியர்களே முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களை நம்பிய பலர் கடவுளை விட்டு விலகி விடுகின்றனர். ஒரு முறை அனேகர் இயேசுவை விட்டுப் பின் வாங்கிச் சென்றனர். இயேசு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்குப் பேதுரு என்பவர் ‘யாரிடத்திற்குப் போவோம் ஆண்டவரே? உம்மிடத்தில் நித்திய ஜீவ வசனம் உண்டே’ என்று அறிக்கை செய்தார்.
வேத வசனங்கள் வழியாக ஆண்டவர் நம்மை நித்ய ஜீவனுக்கு ஆயத்தம் செய்கிறார். எனவே கடவுளையும் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புவோம். அவரில் நித்திய ஜீவன் பெற்று வாழ்வோம்.
பரலோகப் பிதாவே! உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் நம்புவதே நித்திய ஜீவனாக இருக்கிற படியால் அவரில் எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளரச் செய்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.