சங்கீதம் 146 : 6-9 03 ஜனவரி 2024, புதன்
“அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும்… விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமலிருங்கள்.” – யாத்திராகமம் 22 : 21, 22
வியாபார நோக்காய் இந்தியா வந்த மேலை நாட்டினர் இந்திய வளங்களால் ஈர்க்கப்பட்டனர். மக்கள் புரட்சியினால், நாடு அவர்களிடமிருந்து விடுதலை பெற்றது. சகோதரத்துவம், சமத்துவக் கொள்கைகளில் வாழ மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். ஆனால் நமது நாடு முற்றிலும் விடுதலை பெற்றதாக, எல்லா வளங்களும், நலங்களும் கொண்டதாக மாறிவிட்டதா? இன்றைய வறுமைக்கும் வேலையின்மைக்கும் யார் காரணம். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்துகொண்டே போவது ஏன்? இப்புதிய ஆண்டின் துவக்கத்தில் நம் எல்லாருடைய மனங்களிலும் எழ வேண்டிய கேள்வியிது.
இ°ரவேலர் எகிப்திய தேசத்தில் அடிமைகளாயிருந்தனர். கடவுள் அவர்களை மீட்டு தம் ஜனங்களாக ஏற்றார். அவர்களை தம் ஜனங்களாக வாழச் சட்டங்களைத் தந்தார். தாம் பெற்ற சுதந்திரத்தைத் தம்மோடு வாழும் மக்களுடன் பகிர்ந்து வாழும் முறையினைக் குறித்து கடவுள் எச்சரித்துச் சொன்ன வார்த்தைகளே இத்தியானப் பகுதி.
இன்று சமூகத்தில் இன்னல்களுடன் வாழ்வோர் பலர். போரின் கொடுமையினால் நாடு விட்டு நாடு வந்தவர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், விதவைகள் போன்றோர் பற்றிய துன்பச் செய்திகள் சமூகத்தில் தினமும் ஒலிக்கின்றன. திருச்சட்டங்களின் மொத்தக் கருத்து அன்பே. பிறரிடத்தில் அன்பு கூறுவதே தேவ பக்தியின் நிறைவாகும். பாரபட்சமும், கொடுமையும் சமூக வாழ்வில் வளத்தை அழிக்கும் தீமைகள். இன்றைய தீவிரவாதிகள் இத்தீமைகளினாலேயே உருவானார்கள் என்பது வரலாற்றுச் செய்தி. நடந்து வந்த பாதையை மறப்பவர்கள் நிகழ்கால வன்முறையாளர்கள். கடவுள் இ°ரவேலருக்கு தம் மீட்பின் செய்கையை நினைப்பூட்டினார். ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும், விதவைகளையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்களுடையது என்றார்.
உதவி செய்யத்தக்கவர்களுக்கு உதவி செய்யாமலிருப்பது பாவம் என்கிறது திருமறை. ஏழைக்கு உதவுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். நல்ல சமாரியன் தன்னை ஒதுக்கின யூத சமூகத்தானைப் பரிவுடன் நடத்தினான். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் தேவசமூகத்து மக்கள் பொறுப்பே. நற்செய்திப் பணி மட்டுமே இறைப்பணி என்று எண்ணினால் இன்று நாம் காணும் அச்சகம், பாடசாலை, மருத்துவமனை, பெண்கள் விடுதி, ஆதரவற்ற பிள்ளைகளுக்கான விடுதிகள் வந்திருக்காதே.
8ம் நூற்றாண்டு தீர்க்கர் ஆமோ° மனித நேயமற்ற பக்தியைக் கடவுள் அருவருக்கிறார் என்று கடிந்துரைத்தார். சமூக அளவில் புறக்கணிக்கப்பட்ட சமாரியரையும், விதவைகளையும் இயேசு நாடிச் சென்று துயர் நீக்கினார். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அனைவரையும் மீட்டார். நாம் கடவுளின் ஜனம். வாழ்வில் பாதை அறியாமல் நிற்கும் இளைஞரையும், முதியவரையும், விதவைகளையும் புறக்கணித்தால் அதுவே சமூகத்தின் சிறுமையும், கொடுமையும் தாழ்வுமாகும். தேவையுள்ளோருக்கு நாம் சமூகக் காவலர்களாக இருக்கிறோம். இது இப்புதிய ஆண்டிற்கென இறைவன் நமக்குத் தந்திருக்கும் பொறுப்பு. இறை சித்தத்தை நிறைவேற்றுவோம்.
கடவுளே, எங்களை பாவ அடிமைத் தளையிலிருந்து மீட்டு உம் ஜனமாக்கினீர். சமூக வாழ்வில் கொடுமை அனுபவிக்கும் மக்களோடு இணைந்து தீமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப எங்களைப் பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.