சங்கீதம் 145 : 1-6                                       29 மே 2022, ஞாயிறு

“ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு உமது செய்கைகளின் புகழைச் சொல்லும்.” – சங்கீதம் 145 : 4

ஒரு காந்தியவாதி இவ்விதம் வேதனையோடு குறிப்பிட்டதை, வாசிக்க நேர்ந்தது. ‘வரும் தலைமுறைக்கு பணத்தாளில் தான் காந்தியைக் காண்பித்து, அவர்தான் தேசப்பிதா என்று சொல்லித் தரவேண்டிய சூழல் வரும். அதுவும் இல்லாமல் போனால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,’ என்று குறிப்பிட்டு இருந்தார். கடந்தகால வரலாறை மறந்து போவது இயல்பானதாக இருக்கிறது. நமது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதற்குக்கூட நமக்கு இப்பொழுது நேரம் இல்லை. தாத்தா பாட்டிகளும் கூட இல்லை. ஏனெனில் அவர்கள் இருப்பது முதியோர் இல்லத்தில். ‘அந்தக்காலத்தில் நாங்கள்’ என்ற சொற்றொடரை சொல்லுவது கூட குறைந்துக்கொண்டு வருவது நிதர்சனமான உண்மை.

தியான பகுதியில் சங்கீதக்காரன் கடவுளின் செயல்களை ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு அறிவிக்கும் என்று குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தபிறகு , அந்த விடுதலையை நினைத்து பஸ்கா பண்டிகையை ஆசாரிக்க கூறினார். பண்டிகை ஆசாரிக்கும் போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கடவுள் எவ்விதம் விடுதலைத் தந்தார் என்பதை சொல்வர்கள். என் தகப்பன் சிரியா தேசத்தான். அலைந்து திரிந்தவன். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது கடவுள் தமது புய பலத்தினாலும் வல்லமையினாலும், விடுவித்தார் என்பதை தங்களின் விசுவாச அறிக்கையாகக் கொண்டு தலைமுறை தலைமுறைக்கும் சொல்லித்தர கடவுள் கட்டளையிட்டார். இவ்விதமாக கடவுளின் செயல்களை இஸ்ரவேல் மக்கள் சொல்லி வந்தனர்.

நம்முடைய வாழ்வில் கடவுள் செய்த மிக பெரிய செயல் – நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தம்முடைய குமாரனை அனுப்பியது அவரை நமக்காக பதிலாளாக்கியது. நம்முடைய தண்டனையை அவர் மேல் சுமத்தியது. சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்கு தந்தது.

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கில் மீட்பைப் பெற்றோம். திருவிருந்தில் பங்கேற்கும் போது ஆண்டவர் வருமளவும் அவரின் மரணத்தைப் பிரஸ்தாபப்படுத்துகிறோம். கர்த்தர் இயேசுவில் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புகழந்துப் பாடுவோம்.

அன்பின் இறைவா! நாங்கள் இயேசுவில் பெற்றுக்கொண்ட விடுதலையை தலைமுறை தலைமுறைக்கும் சொல்லி வாழ உதவி செய்தருளும் இயேசுவின் வழியே ஆமேன்.