லூக்கா 18 : 9-14                                                      27 டிசம்பர் 2024, வெள்ளி

“…இந்த ஆயக்காரனைப் போலவும் நான் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.” – லூக்கா 18 : 11

பிற மனிதனுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்கிறான் மனிதன், பணத்தில், குணத்தில், தரத்தில் இந்த ஒப்பீடுகள் தொடருகின்றன. ஒப்பிட்டு பார்க்கின்றவர்கள் நாமும்தான். உயர்ந்தவனாக, நல்லவனாகவே, நம்மைப்பற்றி நினைத்துக் கொள்கிறோமே உங்கள் அளவுகோல் என்ன? மனிதனா? கடவுளா? தினவாழ்வின் நடைமுறைகளா? தெய்வத்தின் வரைமுறையா?

இன்றை தியானப்பகுதியில் தன்னை உணர்ந்தவனாக எண்ணிய பரிசேயன் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. பரிசேயன் ஆலயத்தில், ஆயக்காரனுடன் தன்னை ஒப்பிட்டு, தன்னைத்தானே கடவுளுக்குச் சிபாரிசு செய்கிறான். கருணைக்கடவுளுக்கு முன்பு, சுயநீதி சுயபுராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. பரிசேயன் எப்படி வந்தானோ அப்படியே திரும்பினான். தவறாக அளவெடுத்தான் தப்பான அளவுடனே ஆலயத்திலிருந்து திரும்பினான். பரிசேயனோடு ஜெபித்த மற்றொருவன் ஆயக்காரன். தன்னை ஒன்றுமில்லாதவனாக தகுதியற்றவனாக நினைத்தான். இறைவன் முன்னிலையில் தலைகுனிந்து நின்றான். `பாவியாகிய என் மேல் இரங்கும்’ என்று பரிதாபமாகப் பிராத்தனை செய்தான். குனிந்து நின்றவன் இறையருளால் மன்னிப்புப் பெற்று நிமிர்ந்து சென்றான். நம்மை யாருடன் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கின்றோம்? யாருக்கு முன்பாக நம்மை உயர்த்திக் கொண்டிருக்கின்றோம்? சிந்தித்துப் பாருங்கள். மனிதனுக்கு முன்பாகவே என்னை நல்லவன் என்று சொல்ல முடியாது. என் லட்சணத்தை நான் மறைத்தாலும் உலகத்துக்கு நான் யார் என்று நன்றாகத் தெரியும். நமது லட்சணம் தெய்வத்திற்குத் தெரியாது என நினைக்காதீர்கள்.

அவர் முன்பு தலைகுனிவோம், `நான் பாவி’ எனக் கூறி விம்மி அழுவோம். மன்னிப்புப் பெற வேண்டுமா? தேவ இரக்கம் அனுபவிக்க வேண்டுமா? சாதனைப்பட்டியலைத் தொலைத்துவிடுங்கள் பாவபட்டியலை விரித்துக் காட்டுங்கள்.

பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் நல்ல ஆண்டவா என்னை நீர் அறிவீர். என் அக்ரமங்களை நான் மறைக்க முடியாது. கிருபையோடு மன்னியும். நல்லதை நினைக்கும் நல்மனதைத் தாரும். ஆமேன்.