எபேசியர் 2 : 19-22                                         15 ஏப்ரல் 2024, திங்கள்

“ஆகையால் நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமல்ல; கடவுளின் வீட்டார்.” – எபேசியர் 2 : 19

நாம் கடவுளின் வீட்டார் என்று சொல்லும்போது எவ்வளவு சந்தோஷம் மனதில் உணர்ந்து இருக்கிறீர்கள்.

இந்திய தேசம் அந்நியருக்கு அடிமைப்பட்டு இருந்த காலத்தில் இந்திய தேச மக்களில் அடிமைப்பட்டு இருந்த மக்கள் ஏராளம். உயர்குடி மக்கள்முன் துண்டு அணிதல் கூடாது, அவர்களை தொடக்கூடாது, அவர்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது. பெண்கள் மார்பகத்தை மூடக்கூடாது என்ற கொடூரமான அடிமைத்தனம் இருந்தது. நம் முன்னோர்கள் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்தனர். அநேக மிஷெனரிகள் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்து நமக்கு விடுதலை பெற்ற தந்தனர் என்பது உண்மை.

கடவுளின் வீட்டார் என்று அழைக்கப்படும் வாழ்வு முதற்காலத்தில் நமக்கு கிடைக்கவில்லை. அது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரிமையாக இருந்தது. கடவுளின் சொந்த ஜனமாக அவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகையின் மூலமாக அந்நியர் பரதேசிகள் என அழைக்கப்பட்ட நாம், இயேசுவின் இரத்தத்தினால் மீட்கபட்டோம். கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டு வாழ்கிறோம். இன்று நாம் அனைவரும் கடவுளின் வீட்டார்.

கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டு வாழ்கிற நமக்கு சில பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நம் நாட்டில் அந்நியரும் பரதேசியுமாக வாழும் மக்கள் கடவுளின் பிள்ளைகளாக மாறுவதற்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும். அவர்களையும் கடவுளின் வீட்டிற்கு அழைத்து வரும் உன்னதமான பணியை செய்ய வேண்டியது அவசியமாகிறது. கடவுள் அப்பணியை செய்ய நம்மை அழைக்கிறார்.

நம்முடைய கிராமங்களில், பட்டணங்களில் நம் அருகில் வசிக்கும் குடும்பத்தார் நமக்கு உறவினர்கள் என்பதை அறிவோம். கடவுளின் அன்பை அவர்களுக்கு காண்பிப்போம். இயேசு அவர்களையும் நேசிக்கிறார் என்பதை நம்முடைய செய்கைகளின் மூலம் அறியச் செய்வோம். இதுவே கடவுளின் வீட்டாரின் முதன்மைப்பணி.

அன்புள்ள கடவுளே! உமது சொந்த குமாரனாகிய கிறிஸ்துவின் மூலம் நாங்கள் உமது பிள்ளைகளாக மாற்றப்பட்டதற்கு நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.