ரோமர் 8 : 12-17                       21 டிசம்பர் 2024, சனி

“நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, கடவுளின் சுதந்திரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;….” – ரோமர் 8 : 17

பெற்றோர்களின் சொத்துக்களுக்கு வாரிசு, அவர்களின் பிள்ளைகள், வாரிசுகள், தகப்பனின் சொத்துக்களையும், பெருமையையும், மரியாதையையும் நிலைநாட்டுவார்கள், வளர்ப்பவர்கள்.

பவுலடிகளார் நம்மை, கடவுளின் வாரிசுகள் என அழைக்கிறார். இந்த வாரிசுத் தன்மையை, இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் நமக்கு தந்திருக்கிறார். ஆதார வசனப்படி நாம் `கிறிஸ்துவுக்கு இணையான உடன் வாரிசுகள்’ என்றும் அழைக்கப்படுகிறோம். விசுவாசிகளின் `பிறப்புரிமை’ என்பது, `கடவுளின் பிள்ளைகள்’ என்ற உயர்ந்த நிலைமை. நாம் அவரால் படைக்கப்பட்டவர்களாக இருப்பதினால், நாம் அவரின் வாரிசுகளா? நல்ல செயல்களை செய்வதால் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியுமா? கிறிஸ்தவ மதச் சடங்குகளை ஒழுங்காக பின்பற்றுவதினால் நாம் கிறிஸ்துவின் வாரிசுகளா? இல்லவே இல்லை! கடவுளின் கிருபையினால் நாம் கடவுளின் பிள்ளைகள், கிறிஸ்துவின் வாரிசுகள், கடவுள் நம்மைத் தத்து எடுத்திருக்கிறார். `நான் கடவுளின் வாரிசு இல்லை’ என யாரும் சொல்லவே முடியாது. உலகோர் ஒவ்வொருவரும் `தனது வாரிசு’ ஆகவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதற்காகவே இயேசு பாடுபட்டு, மரித்து, உயிர்த்தார்.

கிறிஸ்துவின் வாரிசுகளாக இருக்கிறவர்கள்; இரட்சிப்பு, விடுதலை நித்ய ஜீவன், பாவ மன்னிப்பு, சமாதானம், கிருபை ஆகிய அனைத்திற்கும் உரிமையாளர்களாகிறோம். அனாதைகள், வாழ்வு பறிக்கப்பட்டோர், சமூகத்தால் துரத்தப்பட்டோர், நலிவுற்றோர் போன்றவரும், `கடவுளின் வாரிசுகள்’ தான்! இந்த உயர்ந்த நிலையை இவர்களுக்கு உணர்த்துவது நமது பொறுப்பல்லவா? கிறிஸ்துவின் வாரிசுகளே நீங்கள் பெற்ற பெரும் பேறை பிறருக்கு அடையாளங்காட்டுங்கள்.

எங்கள் உயிர், உடல் ஆஸ்திகளுக்கு அதிபதியே, தகப்பனே! நீர் எங்களை உமது பிள்ளைகளாக்கி, இயேசுவின் மூலம் வாரிசுகளாக வைத்திருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பாக்கியத்திற்குரியவர்களாக நாள்தோறும் வாழ எங்களை ஆண்டு கொள்வீராக. ஆமேன்.