எபேசியர் 2 : 8-10 26 மே 2022, வியாழன்
“நாம் கிறிஸ்து இயேசுவுக்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்களும், கடவுளின் கை வேலையுமாயிருக்கிறோம்.” – எபேசியர் 2 : 10
ஒரு சிறுவன் மரக்கப்பலைச் செய்ய விரும்பினான். தந்தையின் ஆலோசனையின்படி தண்ணீரில் மிதக்கும் ஒரு கப்பலை செய்ய ஆரம்பித்தான். மிக நேர்த்தியான வேலைப்பாடுடன் செய்தான். அழகான கப்பல் செய்து முடித்தான். மிக்க மகிழ்ச்சியோடு அக்கப்பலை தண்ணீரில் விடவும் அது எவ்விதம் செயல்படுகின்றது பார்க்க ஆசைப்பட்டான். ஆனால் ஆற்றில் வெள்ளம் அதிகம் என்பதால் கப்பல் விட சிறுவனின் அம்மா அனுமதிக்கவில்லை. சிறுவன் செயல்படாத கப்பலை நான் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று வினாவோடு இருந்தான்.
தியான பகுதியில், பவுல் அடிகளார் நாம் கடவுளின் கைவேலைப்பாடுகள் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் உருவாக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் என்றும் நற்செயல் செய்வதற்கென்று உருவாக்கப்பட்டோம் என்று குறிப்பிடுகிறார். கடவுள் மனிதனை தமது சாயலில் படைத்தார். ஆனால் மனிதனோ கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால் கடவுளின் சாயலை இழந்துபோனான். கடவுளின் உறவை இழந்தான். கடவுளே தமது கிருபையினால் மனித உறவை சரிப்படுத்த தமது குமாரனை அனுப்பினார். குமாரனும் சிலுவை மரணத்தினால் மனிதனை பிதாவாகிய கடவுளுடன் ஒப்புரவாக்கிக்கொண்டார். ஒப்புரவாக்குதலின் பலன் மனிதன் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாக்கப்பட்டான். இந்த நிலையே கடவுளின் கைவேலை என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் கடவுளின் கைவேலையாக இருக்கின்ற நாம் நற்காரியங்களைச் செய்ய எதிர்பார்க்கிறார்.
அன்பானவர்களே ‘கிருபையினால் விசுவாசித்தினால் இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. கடவுளின் ஈவு’, என்ற திரு வார்த்தையின் படி நாம் கிறிஸ்துவுக்குள் கடவுளின் கைவேலையாக இருக்கிறோம். நற்செயல்கள் நம்மில் வெளிப்பட கடவுள் எதிர்பார்க்கிறார். கடவுள் கிறிஸ்துவில் நம்மில் அன்பு கொண்டது போல் நாமும் அன்புகூரவேண்டும். அவர் நமது பாவங்களை மன்னித்தது போல நாமும் மன்னிக்கவேண்டும். அவர் நமது பாரங்களைச் சுமந்தது போல நாமும் அயலானின் பாரத்தை சுமக்க வேண்டும். கிறிஸ்துவை நம் வாழ்வில் காண்பிக்கவேண்டும். கடவுளின் கைவேலைப்பாடாக நற்செயல்களைச் செய்து வாழ கடவுள் அருள் செய்வாராக. ஆமென்.
கடவுளே, கிறிஸ்துவுக்குள் உமது கைவேலைப் பாடாக இருக்கின்ற நாங்கள் உமக்குச் சாட்சிகளாக வாழ கிருபை செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.