யாக்கோபு 3 : 9-12                                            19 ஜூலை 2024, வெள்ளி

“செல்வனும் ஏழையும் ஒன்றாய் குடியிருப்பார் அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.” – நீதிமொழிகள் 22 : 2

நம் தியான வாக்கியப் பகுதி நாம் வாழும் சமூகத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதில் செல்வனும் ஏழையும் ஒன்றாய் குடியிருப்பர் என்கிறது.

நம் அனைவரையும் உண்டாக்கினவர் கடவுள். அவருடைய படைப்பில் செல்வந்தன் ஏழை பெரியவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பவர்கள் எவரும் இல்லை. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள்தான் பிரிவுகளை உருவாக்கி, தனித்தனி கூட்டங்களாக வாழுகிறார்கள்.

செல்வந்தன், ஏழை லாசரு வேதபகுதியில் இருவரும் ஒன்றாக வாழந்து வந்ததை இயேசு விளக்குகிறார். செல்வந்தன் தான் பெற்ற செல்வத்தால் சுக போக வாழ்க்கை வாழ்கிறார். ஏழை லாசரு வறுமையில் மிகுந்த வேதனையான வாழ்க்கை வாழ்கிறார்.

செல்வந்தனுக்கு அருளப்பட்ட செல்வம்; அவன் அனுபவிக்க மட்டுமல்ல. அது லாசருக்கும் பகிர்ந்தளிக்க கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் லாசருவை கனிவோடு கவனிக்கவில்லை. எனவே தான் மரணத்திற்கு பின் நரக வேதனைப்படுகிறான். லாசரு ஆபிரகாமின் மடியில் சுகவாழ்வை பெற்றான் என்று வாசிக்கிறோம்.

நம்முடைய வார்த்தைகள் செயல்கள் நடத்தை பேச்சு நமக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் தாலந்துகள் பக்தியுடன் கூடிய விசுவாசம் இவை அனைத்தும் பிறரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர் வாழ்வில் முதல் நூற்றாண்டில் அனைவரும் தமக்குரியதை பிறர் அனுபவிக்கும்படியாக கொண்டு வந்தார்கள் என் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ஆசீர்வாத நன்மைகளுக்கு ஏதுவாக ஒளிவு, மறைவின்றி கொண்டு வந்தார்கள்.அவை அனைவருக்கும் பயன்பட்டது.

நம்முடைய ஆசீர்வாதங்கள் பிறருக்கு பயன்பட வேண்டும். ஏனெனில் நாம் ஒரே கடவுளால் படைக்கப்பட்டவர்கள். உறவுகளாய் இணைக்கப்பட்டவர்கள். சமூக வாழ்வில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் சமமானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களும் உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் நம்மில் காணப்பட வேண்டும், வளர வேண்டும்.

நாம் கடவுளின் பிள்ளைகள் என பிறரும் உணர்வதற்கு கிடைத்திருக்கிற இந்த வாழ்வை கொண்டு கடவுள் நாமம் மகிமை அடைய செய்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்திருக்கிறார்.

அன்பு நிறைந்த கடவுளே! எங்களை அழைத்து வளமான வாழ்வுக்கு வழி நடத்தி வருகிறீர் நன்றி. நாங்கள் பெற்ற வளங்களை பிறருக்கும் பகிர்ந்தளிக்கிற மனதை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.