மாற்கு 15 : 27-32 12 ஏப்ரல் 2022, செவ்வாய்
“உன்னை நீயே இரட்சித்துக்கொள்.” – மாற்கு 15 : 30
சிலுவை மரணம் ரோமர்களால் அடிமைக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகும். தண்டனைகளில் மிகவும் இழிவான தண்டனையாக இது கருதப்பட்டது. சிலுவை, குறுக்கும் நெடுக்குமாக இரண்டு மரத்துண்டுகளை வைத்து செய்யப்படும். சிலுவையில் அறையப்படுபவரின் கைகள் கயிற்றால் கட்டப்படும். பின்பு ஆணிகள் அடிக்கப்படும். அதன்பின்பு தூக்கி நிறுத்துவார்கள்.
தூக்கி நிறுத்தப்படும் போது உடல் பாரத்தால் கீழ்நோக்கி இழுக்கும். இதனால் கால்களுக்கு கீழே மரக்கட்டைகள் வைக்கப்படும். இது உடலின் பாரத்தை தாங்கிக் கொள்ளும். சிலுவையில் அறையப்படுபவர்கள் ஓரிரு நாட்களிலேயே இறந்துவிடுவார்கள்.
ஜோசிபஸ் என்கிற சரித்திர ஆசிரியர், “ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்வோரும், கொள்ளையர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான். இதை நிறைவேற்றும் பொறுப்பை ரோமப் போர் வீரர்கள் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மிகக் கொடூரமாகவே இயேசுவை தண்டித்தார்கள். சிலுவையை செய்து அதை அவரே சுமந்து செல்லும் படி செய்தார்கள்.
சிலுவையில் அறையப்படுவோர் நகர எல்லைக்கு வெளியே அறையப்படுவது வழக்கம். இதனால் இயேசுவை நகர எல்லைக்கு வெளியே கொண்டு போனார்கள். அக்கால வழக்கத்தின்படி இயேசுவே தம் சிலுவையை சுமந்து கொண்டு போனார்.
கொல்கதா மலையில் சிலுவையை கீழே போட்டு அதன் மீது இயேசுவை கிடத்தி இரு கைகளில் இரு ஆணிகளையும் இரண்டு கால்களையும் சேர்த்து ஒரு ஆணியும் கதற கதற அடித்தார்கள்.
இயேசுவை கொலை செய்ததை உலகத்தார் முன் நியாயப்படுத்த இருபுறமும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்தார்கள். பின்பு மூன்று சிலுவைகளையும் தூக்கி நிறுத்தினார்கள். இயேசுவும் கொலை குற்றவாளி என்பதை நிலைநாட்ட இரு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறைந்தார்கள்.
இயேசு அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்று ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. சிலுவையில் அறையப்பட்ட இடத்தை கடந்து செல்பவர்கள் தங்கள் தலைகளை அசைத்து ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுகிறவனே! சிலுவையில் இருந்து இறங்கிவா. முதலில் உன்னை இரட்சித்துக் கொள் என்றார்கள். பிற மக்கள், மற்றவர்களை இரட்சித்தான் தன்னை இரட்சிக்க சக்தியில்லாதிருக்கிறான் என்றார்கள். நீ சிலுவையில் இருந்து இறங்கி வந்தால் உன்னை நம்புவோம் என்றார்கள்.
இயேசு சிலுவையில் இறங்கி வந்திருந்தால் மனுக்குல மீட்பு இல்லாமல் போயிருக்கும். முழு உலக மக்களும் நித்திய மரணத்திற்கு பாத்திரராய் இருந்திருப்பார்கள். பிதாவின் சித்தம் நிறைவு பெறாமல் போயிருக்கும். நம் மீது இயேசு கொண்ட அன்பே சிலுவை பாடுகளை அனுபவிக்கக் காரணம் என்பதை அறிவோம்.
அன்பின் ஆண்டவரே! சிலுவை மரணத்தில் இயேசு காண்பித்த அன்பினின்று விலகி போகாதபடி காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.