2 கொரிந்தியர் 8 : 1-9 23 ஜுன் 2023, வெள்ளி
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.” – லூக்கா 6 : 38
எனக்குத் தெரிந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியிலே அநேக மாணவிகள் தங்கியிருந்தனர். மூன்று வயது குழந்தை முதல் பதினெட்டு வயது அல்லது +2 படிக்கும் பெண் பிள்ளைகள் மட்டும் தங்கி பயிலகூடிய இடம்அது. பெற்றோரை இழந்த அப்பிள்ளைகளுக்கு சகலமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அங்கே தன்னுடைய பள்ளி பருவத்தைக் கடந்து சென்ற ஒரு பெண் வெகுகாலம் கழித்து அந்த விடுதிக்கு வந்தார். தான் அயல் நாட்டில் நர்சாக பணிபுரிவதாகக் கூறி விடுதியிலிருந்தோரிடம் அன்பைப் பரிமாறிக் கொண்டார். மாலை நேரத்தில் அவர் செல்ல ஆயத்தமானபோது விடுதி காப்பாளரிடம் ஒரு கவரைக் கொடுத்தார். அந்த கவருக்குள் ஒரு காசோலை இருந்தது. அதில் அந்த விடுதிக்காக அந்த பெண் நான்கு இலட்சம் ரூபாய் அன்பளிப்பாய் அளித்திருந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த கிறிஸ்தவ விடுதிக்கு அவர் தன்னால் முடிந்ததை செய்தார்.
இன்றைய தியானப் பகுதியில் பவுல் கொரிந்து திருச்சபையிலிருந்து காணிக்கையை எருசலேமிலிருக்கிற ஏழைகளுக்காக கொடுக்க வேண்டிக் கொள்கிறார். பவுல் உருவாக்கிய அநேக திருச்சபைகள் புறஜாதிகள் நிறைந்ததாய், செல்வந்தர்கள் நிறைந்ததாய் இருந்தது. இவர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளை எருசலேமிலிருக்கிற ஏழை விசுவாசிகளுக்கு கொடுப்பது அவருடைய நோக்கம்.
கிறிஸ்தவ ஊழியத்திலே பிரதான அங்கம் வகிப்பது சமுதாயப் பணி. மிஷனரிகள் தாங்கள் ஊழியம் செய்த இடத்திலே உள்ள ஏழை எளிய மக்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், உணவு விடுதிகள் கட்டினார்கள். இவைகள் அனைத்தும் கடவுளுடைய தாசர்கள் தயவாய் கொடுத்த நன்கொடைகளால் கட்டப்பட்டு அநேகருக்கு வாழ்வு அளித்தது.
இந்த ஊழிய அமைப்பிற்கு மாதிரியாக இருந்தது ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று பவுல் குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து நம்முடைய நல்வாழ்வுக்காக தம்முடைய நல்வாழ்வைத் துறந்தார். இந்த உலகிலே ஏழையாக வாழ்ந்தார், தம்மை தாழ்த்தினார்.
அவருடைய பாதையை பின்பற்றுகிற நம்முடைய வாழ்விலும் ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, தரித்திரரைத் தாங்குகிற திருச்சபை ஊழியங்களுக்கு உதவி கரம் நீட்டும்படி ஆவியானவர் ஏவுகிறார். பணமோ, நேரமோ, ஆலோசனையோ, பரிசுகளோ எந்தவொரு உதவியும் செய்து இயேசுவைப் பிரதிபலித்து வாழ தூய ஆவியானவர் துணை செய்வாராக.
ஆதரவளிக்கிற கடவுளே! நீர் எனக்கு தந்த நன்மைகளை உம்முடைய மக்களுக்கு பகிர்ந்தளிக்கிற மனதை தரும்படி இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன். ஆமேன்.